தீபவிழாவின் போது அண்ணாமலையார் கோயிலுக்குள் போலீசாரின் எண்ணிக்கை அளவுக்கு மீறி இருக்க கூடாது என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் கார்த்கை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
தீபவிழா ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் வருமாறு,
14 சிறப்பு ரயில்
1) 13 தற்காலிமாக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது இந்த பேருந்து நிலையங்களில் 1160 பேருந்துகள் நிறுத்தம் செய்யும் அளவிற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
2) நகராட்சிக்குட்பட்பட்ட பகுதிகளில் 25 கார் நிறுத்துமிடங்களும் ஊரக பகுதிகளில் 34 கார் நிறுத்துமிடங்களும் என மொத்தம் 12.400 கார்கள் நிறுத்தம் செய்யும் அளவிற்கு 59 கார் நிறுத்தும் இடங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்
3) தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கார் நிறுத்துமிடங்களில் குடிநீர் வசதி, கழிப்பறைகள், மின்விளக்குகள், மேற்கூரைகள், காவல் மையம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
4) 2692 சிறப்பு பேருந்து மூலம் 6431 நடைகள் இயக்கப்படவுள்ளது. தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் கிரிவலப் பாதை இடையே 180 பள்ளி வாகனங்கள் இயக்கப்படவுள்ளது.
5) தற்போது 9 ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்டோ கட்டணம் 2.5 கிலோ மீட்டர் வரை ரூ.30 தனிநபருக்கு ரூ.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மலையேற 2500 பக்தர்களுக்கு அனுமதி
6) கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
7) திருக்கோயில் வளாகத்திற்குள் 3 மருத்துவ குழுக்கள்
(இதய மருத்துவருடன்), கிரிவலப் பாதையில் 15 நிலையான மருத்துவ குழுக்கள், 15 எண்ணிக்கையில் 108 அவசர ஊர்தி வாகனங்கள், 10 இரு சக்கர ஆம்புலன்ஸ், 5 ஜம்ப் கிட் ஆகியவை ஏற்பாடு செய்யப்படும்.
8) பாதுகாப்பு பணியில் 12097 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கோயில் வளாகத்திற்குள் 169 கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் 97 கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவப்பட்டுள்ளது. 57 இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளது.
9) குழந்தைகள் காணாமல் போவதை கண்டுபிடிக்க அவர்களது கைகளில் Wrist Band கட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தன்னார்வலர்களாக 1000 கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.
10) 158 இடங்களில் குடிநீர் வசதிகள் செய்து தரப்படும். 85 இடங்களில் 423 கழிப்பிடமும், மற்றும் 386 சிறுநீர் கழிக்கும் இடமும் அமைக்கப்படும்.
11) 33 உயர் மின் கோபுர விளக்குகள் மற்றும் 1218 தெருவிளக்குகள் அமைத்து தரப்படும்.
12) மகாதீபத்தன்று மலையேறுவதற்காக 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
13) தீபவிழா நிகழ்வுகள் பெரிய திரை வாயிலாக 12 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
14) 101 இடங்களில் மட்டும் இணைய வழியில் அன்னதானம் செய்ய அனுமதி அளிக்கப்படும்.
தங்க நாணயங்கள் பரிசு
15) தீபவிழாவின் போது கிரிவலத்தின் போது துணிப்பை எடுத்து வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் 4 தங்க நாணயங்கள் (2 கிராம்) மற்றும் 72 வெள்ளி நாணயங்கள் (4 கிராம்) அளிக்கப்படும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பை அளிக்க 9 சிறப்பு மையங்கள் திறக்கப்படும்.
16) 2.12.2022 முதல் 6.12.2022 வரை 5 நாட்கள் மாட்டு சந்தை நடைபெறும்.
கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது,
மகாதீபத்தன்று கோயிலுக்குள் மிக முக்கிய பிரமுகர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் வேறு யாரையும் உட்கார வைக்க கூடாது, உபயதாரர்கள் செல்ல தனி வழி ஒதுக்க வேண்டும்.
காலையிலிருந்து பணி செய்யும் போலீசார் மாலை நேரத்தில் சோர்ந்து விடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உருவாகிறது. எனவே காலை, மாலை என பிரித்து போலீசாருக்கு பணி வழங்கிட வேண்டும், 100 மருத்துவ குழுக்களை நியமிக்க வேண்டும்.
அனைத்து வசதி கொண்ட கோயிலாக மாறும்
10 நாள் தீபத்திருவிழாவில் கோயிலுக்குள் உள்ள அர்ச்சகர்கள், அதிகமாக தங்களுக்கு வேண்டியவர்களை தரிசனத்திற்கு அழைத்து வருவதை முறைப்படுத்த வேண்டும்.
தேர் வரும்போது சிறு அசாம்பாவிதம் கூட நடக்க கூடாது, ஒவ்வொரு தேருக்கும் அதிகாரிகளை பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும், கோயில் வளர்ந்தாலும், பக்தர்கள் வந்தாலும் பொருளாதாரம் உயரும். எனவே 3 ஆண்டுகளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட திருக்கோயிலாக மாறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது,
3 ஆண்டுகளில் திருவண்ணாமலை, திருப்பதியை போல் ஆக்கப்படும் என அமைச்சர் சொல்லியிருக்கிறார். அதற்காக அவர் சொல்வதை நெடுஞ்சாலைத்துறை மூலம் செய்து கொடுக்க தயாராக உள்ளோம்.
கூட்டம் கூடும் இடங்களிலும், விழா காலங்களிலும் போலீஸ் மூலம் பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை. வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து இது போன்ற விழா காலங்களிலே காவல்துறை மிகச் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் எண்ணம். ஏனென்றால் இது அவரின் துறை.
திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் அசாம்பாவிதங்கள் இன்றி பாதுகாப்பு பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மகாதீபத்தன்று கோயிலுக்கு வெளியே பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். கோயிலுக்குள் ஆன்மீக அன்பர்களை விட போலீசாரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக என்னிடத்தில் சொல்கிறார்கள்.
பாஸ் பெற்று உள்ளே வாருங்கள்
இதை நான் குறையாக சொல்லவில்லை. 2006ல் நான் அமைச்சராக இருந்த போது பாஸ் உள்ளவர்களை மட்டும்தான் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும். உங்கள் இஷ்டத்திற்கு பாசை வழங்க கூடாது என அப்போதைய எஸ்.பி முருகனிடம் கூறினேன்.
அதிகமாக பாசை வழங்கி விட்டால் ஆன்மீக மக்களை பாதுகாக்க முடியாது. எனவே புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட எஸ்.பியும் சம்மந்தப்பட்ட அமைச்சரிடம் எப்படி பாஸ் வழங்குவது என கலந்து பேசி வழங்கிட வேண்டும்.
கோயிலுக்குள் எங்கெங்கு காவல்துறை தேவையோ, அந்த இடத்தில் பாதுகாப்பை வழங்குங்கள். பாதுகாப்பு கொடுப்பது என்பது அரசாங்கத்தின் கடமை. அதே நேரத்தல் அளவுக்கு மீறி காவல்துறையை உள்ளே வைக்க கூடாது.
வி.ஐ.பியுடன் வருபவர்களிடம் பாஸ் இருக்கிறதா? என கேட்கிறீர்கள். காவல்துறையைச் சேர்ந்தவர் கோயிலுக்குள் இருக்கிறார் என்றால் அவரது உறவினர்கள் மொத்த பேரும் உள்ளே நுழைந்து விடுகிறார்கள் என எனக்கு வாட்ஸ்அப்பில் புகார் வருகிறது.
இங்கு பாலகிருஷ்ணன் எஸ்.பியாக இருக்கும் போது போலீசாருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் காவல்துறையினர் பணியில்தான் ஈடுபட வேண்டுமே தவிர உங்கள் குடும்பமோ, உங்களை சார்ந்தவர்களோ பாஸ் இல்லாமல் உள்ளே வரக்கூடாது என கண்டிப்பான சுற்றறிக்கை அனுப்பினார்.
காவல்துறையைச் சேர்ந்தவர்கள் எனக்கு விரோதி அல்ல. முறையாக உங்கள் அதிகாரியிடம் பாஸ் பெற்று உள்ளே வாருங்கள். விஐபிக்கள் பாஸ் வாங்க சிரமப்படுகிற நிலையில் காவல்துறையினர் அவர்களது குடும்பம், உறவினர்கள் என உள்ளே விடுவது தவறானது.
இவ்வாறு அவர் பேசினார்.
பூசாரிகளுக்கு ஓய்வூதியம்
கூட்டத்தில் கிராமக்கோயில் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டத்தின் 4 நபர்களுக்கு மாதம் ரூ.400 பெறுவதற்கான ஆணையினையும், ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 4 திருக்கோயில்களுக்கு மின் இணைப்பு பெறுவதற்கான ஆணையும்,
4 நபர்களுக்கு திருக்கோயில் பூசாரிகள் நலவாரிய அட்டையினையும் அமைச்சர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்தரமோகன், இந்து சமய அறநியைலயத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.ச.தி.சரவணன், ஓ.ஜோதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், நெடுஞ்சாலை முதன்மைச் செயலாளர் சந்திரசேகரன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.