கொடியேற்றம் தினமான இன்று ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
திருவிழா என்பது எல்லா மக்களுக்கும் இறைவன் அருட்பார்வையால் தீட்சை அளிக்கும் காலம் எனப்படுவதால் அனைவரும் திருவிழாக்களுக்குத் தவறாமல் சென்று இறைவனைக் கண்ணாரக் கண்டு வழிபாடு செய்தல் இன்றியமையாததாக கருதப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இதில் சிறப்பு பெறுகிறது.
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 12 மாதங்களும் பல்வேறு விழாக்கள் நடக்கின்றன. அதில் ஐம்பூதங்களுள் ஒன்றாக இருந்து ஒளிவடிவாய் எழுந்தருளி உலகோரைக் காக்கும் தத்துவத்தை விளக்கும் கார்த்திகை தீபத்திருவிழா புகழ் வாய்ந்ததாகும்.
இத்திருவிழாவில் 2668 அடி உயர மலையில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசித்தால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
கொடிமரத்தின் சிறப்புகள்
மும்மலத்திலே அமிழ்ந்து கிடக்கின்ற ஆன்மா, தீட்சை முறையினால், பாசபந்தமற்றுச் சிவஞானத்தைப் பெற்றுப் பதியின் திருவடியை அடையும் முறைமையைக் கொடியேற்றம் காட்டுகிறது.
விழுந்து வணங்கி இறைவனை சரணாகதி அடைந்து வழிபட வேண்டிய இடமாகவும் கொடிமரம் விளங்குகிறது. பிரார்த்தனைகள் எதுவானாலும் நிறைவாக வேண்டிக் கொள்ள வேண்டிய இடம் கொடிமரமாகும். அதனால்தான் கொடிமரத்துக்கு அடியில் விழுந்து வணங்கி விட்டு அங்கேயே அமர்ந்து இறைவனுடைய திருநாமத்தை ஓதுகிறோம்.
பெருவிழாவினைத் தொடங்குகின்றபோது கோயிலில் கொடி ஏற்றுவது ஆகம விதியாகும். அதன்படி திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கமாக இன்று கொடியேற்றம் நடைபெற்றது.
ஓங்கி ஒலித்த அரோகரா கோஷம்
அதிகாலை காலை 5-30 மணிக்கு கொடியேற்ற நிகழச்சிகள் தொடங்கின. பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரே அமைந்துள்ள தங்க கொடிமரத்தின் முன்பு எழுந்தருளினர்.
தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க காலை 6-11 மணிக்கு தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரம் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை நடைபெற்றது.
அப்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ ‘உண்ணாமலையம்மனுக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிடடு தரிசனம் செய்தனர்.
கொடியேற்றத்தில் சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், ஏடிஜிபி ஜெயராமன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியர்ஷினி, கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்திவேல்மாறன், திமுக நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்தை முன்னிட்டு கோவிலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
கேட்கும் வரங்களை தரும் அண்ணாமலையார்
நோய் தீர, குழந்தை வரம் கிடைக்க, தொழில் அபிவிருத்தி உண்டாக, திருமண தடை நீங்க, தோஷங்கள் நீங்க கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக, குடும்பத்தில் சகல பிரச்சனைகளும் தீர லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையை நாடி வருகின்றனர். 14 கிலோ மீட்டர் தூரம் மலையை சுற்றி வருகின்றனர்.
வேண்டுதல் நிறைவேறியதும் நேர்த்திகடனாக மொட்டை போட்டு முடிக் காணிக்கை செலுத்துகின்றனர். குழந்தை வரம் கிடைக்கப்பெற்றவர்கள் கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை உட்கார வைத்து மாடவீதியை சுற்றி வருகின்றனர். சாமிக்கு அபிஷேக பொருட்களை அளித்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளை நடத்துகின்றனர். நெய்தீபம் ஏற்றுகின்றனர். சாமிக்கு வேட்டி சேலை சாத்துகின்றனர். அன்னதானமும் வழங்குகின்றனர்.
கார்த்திகை மாதம் தொடங்கியதும் ஐயப்பனுக்காக மாலை அணிந்து விரதம் இருப்போர்தான் அதிகம். இதையடுத்து திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை வேண்டிக் கொண்டு மகாதீபம் ஏற்றும் வரை பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதம் மேற்கொள்வர்.
இம்முறை அதிக அளவிலான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு மாலை அணிந்து விரதம் இருந்தனர். கொடியேற்றமான இன்று சிறுவர்-சிறுமியர்கள், பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் அண்ணாமலையார் கோயிலில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் மாலை அணிந்து கொண்டு விரதத்தை துவக்கினர்.
தீபத்திருவிழா நடைபெறும் 10 நாட்களும் இவர்கள் விரதத்தை மேற்கொண்டு கிரிவலம் அல்லது மாடவீதியை வலம் வந்து அண்ணாமலையாரை வணங்குவர். நிறைவு நாளில் மகாதீபத்தை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வார்கள்.