ஓஎஸ்சி எனப்படும் ஒன் ஸ்டாப் சென்டரில் 2 வழக்கு பணியாளர் பணியிடங்களுக்கு பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,
மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள சிறப்பு திட்டமான ‘SAKHI’ என்ற திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் One Stop Centre (OSC) என்ற ஒருங்கிணைந்த சேவை மையம் அமைந்துள்ளது.
இதில் 24 மணி நேரம் அனைத்து நாட்களிலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மருத்துவ உதவி, சட்ட உதவி, காவல் துறை உதவி, உளவியல் ஆலோசனை, மீட்பு மற்றும் தங்கும் வசதி வழங்கப்படும்.
இச்சேவை மையத்தில் வழக்குப் பணியாளர்கள் (Case Worker) பதவியில் பணிபுரிய ( 2 பணியிடங்கள் மகளிருக்கு மட்டும்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதி-முன்அனுபவம்
சமூகப் பணி, ஆலோசனை, உளவியல், சமூகவியல், மனநலம் இந்த பாடப்பிரிவில் இளங்கலைபட்டம் பெற்றிருக்க வேண்டும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு பணியில் குறைந்தபட்சம் 2-வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பெண்களுக்கெதிரான வன்முறை சம்மந்தப்பட்ட அரசு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலோ அல்லது திட்டத்திலோ பணிபுரிந்த முன் அனுபவம் வேண்டும். அத்தகைய சூழலிலோ அல்லது இது தொடர்பான சூழல்களில் ஒரு வருடம் ஆலோசகர் பணியில் இருப்பது விரும்பத்தக்கதாகும்.
மேற்குறிப்பிட்ட கல்வி தகுதிகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். மகளிர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கணினி பயிற்சி பெற்றவர்களுக்கும், உள்ளுர் விண்ணப்பதாரர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
தொகுப்பூதியம் மாதம் ரூ.15,000 (பதினைந்தாயிரம்) வழங்கப்படும்.
விண்ணப்ப விவரம்
மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 2-வது தளம், வேங்கிக்கால், திருவண்ணாமலை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2022
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
“ஒன் ஸ்டாப்” பயன்கள்
ஒன் ஸ்டாப் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பெண்கள் 181 என்ற எண்ணிலும் அணுகி உதவிகளை பெறலாம். இது மட்டுமன்றி ஓஎஸ்சி மையத்தில் 5 நாட்கள் தங்குவதற்கு ஏற்பாடுகளும் செய்து தரப்படும். அப்போது அவர்களுக்கு சட்ட உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஓஎஸ்சி மையம், திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருந்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது. தொலைபேசி எண்-04175-238181. மின்னஞ்சல்- [email protected]
பல்வேறு வகைகளில் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் இம்மையத்தை நேரிலோ, அல்லது தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாகவோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.