பவுர்ணமி மற்றும் அன்னாபிஷேகத்தை யொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தெய்வம் முதல் தாவரம் வரை எல்லா ஜீவராசிகளுக்கும் எல்லாப் பிறவியிலும் தந்தையும், தாயுமாக இறைவனும், இறைவியுமாக அப்பனும், அம்மையுமாக அருள் புரிவது ஓங்கார வடிவ லிங்கப் பரம்பொருள்.
அதனால்தான் தாவரங்கள் அளிக்கும் பூ, இலைகளால் மட்டுமன்றி சாதம், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்து வழிபடப்படுவது அன்னாபிஷேகம் எனப்படுகிறது.
அரிசி, திராட்சை, ஏலக்காய், கல்யாணப்பூசனி, தர்ப்பூசனிப் பழம், வேப்பங்கனி, தேங்காய், கத்தரிக்காய் போன்றவைகள் லிங்க வடிவம் உடையவை.
தாவர நாதர் பரம சிவனுக்கு ஆலங்காடு, பனங்காடு, பராய்த்துறை, கடம்பந்துறை, மாதோட்டம், திருமருகல், திருப்பைஞ்ஞீலி, திருப்பாசூர், திருவிடை மருதூர், திரு நெல்லிக்கா, திரு எருக்கத்தம் புலியூர், திருமாந்துறை, திரு முல்லை வாயில் போன்று தாவரத்தோடு உணவோடு தொடர்பு உடைய தலங்கள் பல உள்ளன.
இதே போல் அரசிலிப்பெருமான், தர்ப்பாரண்யர், மருகல் பெருமான், நெல்லி வன நாதர், வெண்ணிக் கரும்பர், திருச் சோற்றுத் துறையர், வெண்ணெயப்பர், நெய்யாடியப்பர், தாமரையான், மல்லீஸ்வரர், முல்லை நாதர், போன்று ஈசனின் திரு நாமங்கள் கணக்கற்றவை.
இப்படிப்பட்ட இறைவனுடைய அற்புத ரூபத்தை தரிசிக்கின்ற நாள் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று நடைபெறும் அன்னாபிஷேகமாகும். அன்று படைக்கப்படும் ஒவ்வொரு சாதத்திலும் ஒரு சிவத்தின் ரூபத்தை காணலாம். சிவத்தை வழிபட்ட பலன் அன்னாபிஷேகத்தின் போது கிடைக்கும்.
அதை கண்ணார காணுகிறவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பதாலே சோற்றை கண்டால் சுகம் என்று சொல்லப்பட்டது. இதனால் இந்த அபிஷேகத்தை காணவும், அபிஷேகம் செய்யப்பட்ட சாதத்தை உண்ணவும் சிவன் கோயில்களில் கூட்டம் மிகுந்து காணப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அன்னாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் மடப்பள்ளியில் தயாரான 100 கிலோ சாதத்தை கொண்டு கருவறையில் இருக்கும் அண்ணாமலையாரின் திருமேனி முழுவதும் அலங்கரிக்கப்பட்டது.
இதே போல் கல்யாண சுந்தரேஸ்வரரும் 25 கிலோ சாதத்தால் அலங்கரிக்கப்பட்டார். மேலும் அண்ணாமலையார் கருவறை வாயிற்படி வரையிலும் அப்பம், வடை, காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அன்னத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய சிவலிங்கத்தை பிரம்ம தீர்த்த குளத்தில் சிவாச்சாரியார்கள் கரைத்த பிறகு அண்ணாமலையாருக்கு மகா தீபாராதனை நடைபெறும். பிறகு சாமிக்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அன்னம் கலைக்கப்பட்டு அவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

இந்த சாதத்தை உண்டால் நோய் நொடி நீங்கும், வாழ்வில் வளம் கிடைக்கும், குழந்தை பேறு உண்டாகும் என்பதால் பிரசாத்தை வாங்க ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர்.
அன்னாபிஷேகம் நடைபெற்றதால் மாலை 3 மணி முதல் 6 மணி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வெளியே திரண்டிருந்தனர்.
6 மணிக்கு மேல் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதால் பக்தர்கள் முண்டியத்துக் கொண்டு கோயிலுக்குள் சென்றனர். இதனால் அம்மணியம்மன் கோபுரத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசார் கூட்டத்தை ஒழங்கு படுத்தி அனுப்பினர்.
கோயிலுக்கு வெளியே காத்திருந்த பக்தர்களும், கிரிவலம் செல்ல வந்திருந்த பக்தர்களும் 16 கால் மண்டபம் முன்பு சூடங்களை கொண்டும், அகல் விளக்குகளை கொண்டும் தீபம் ஏற்றியதால் அப்பகுதியே ஜொலித்தது.