தங்க புதையல் என்பதை நம்பி ரூ.2லட்சத்தை ஏமாந்த வியாபாரி
புதையல் நகை என்பதை நம்பிய திருவண்ணாமலை வியாபாரியிடம் ரூ.2 லட்சத்தை மோசடி செய்த கர்நடாகாவைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டில் காவியா பேன்சி ஸ்டோர் வைத்திருப்பவர்கள் கார்த்திகேயன், பூங்காவனம் தம்பதியினர். இவர்களிடம் கடந்த 28ந் தேதி 4 வாலிபர்கள் வந்து நாங்கள் பூ அலங்கார வேலை செய்கிறோம், நாங்கள் வீடு கட்டும் போது தங்கப் புதையல் கிடைத்தது, குறைந்த விலையில் விற்கப் போகிறோம், வாங்கிக் கொள்கிறீர்களா? என கேட்டு தாங்கள் எடுத்து வந்திருந்த குண்டு மணி மாலை சரத்தை காட்டினர்.
இதை முதலில் கார்த்திகேயனும், பூங்காவனமும் நம்பவில்லை. அப்போதுதான் 4 பேரும், ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையை தூண்டி விட வேண்டும் என்ற சதுரங்க வேட்டை படத்தின் பாணியில் அவர்களிடம் உண்மையான 5 தங்க குண்டு மணிகளை கொடுத்து விட்டு சென்று விட்டனர்.
இதனால் அவர்கள் கொண்டு வந்த குண்டுமணி மாலைகள் அனைத்தும் தங்கம் என்பதை நம்பிய கார்த்திகேயனும், பூங்காவனமும் அவர்களை தொடர்பு கொண்டு தங்கப் புதையலை தாங்களே வாங்கிக் கொள்வதாக கூறினர்.
இதைத் தொடர்ந்து ரூ.2 லட்சத்தை அந்த வாலிபர்களிடம் கொடுத்து குண்டுமணி மாலை சரத்தை வாங்கிச் சென்றனர். பிறகுதான் தெரிந்தது அவை அனைத்தும் கவரிங் என்பது. இதையடுத்து பூங்காவனம், திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் 4 பேரையும் பிடிக்க குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவல்லி தலைமையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.
இவர்கள் தீவிர விசாரணை நடத்தி 4 பேரையும் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் மடக்கி கைது செய்தனர். கைதான ஆர்.ஜெ.ராகுல்(வயது 24), சோலங்கி பவன்(22), சோலங்கி ராகுல்(20), பிரபு(34) என்ற 4 பேரும் மைசூர் மாவட்டம் மாண்டியாவைச் சேர்ந்தவர்கள்.
இவர்களிடமிருந்த ரூ.52ஆயிரத்தையும், கவரிங் குண்டு நகை சரங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தங்கம் என நம்பி கவரிங் குண்டு மணி மாலையை வாங்கி திருவண்ணாமலை பகுதியில் பல பேர் ஏமாந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது பற்றி நம்மிடம் பேசிய நகை வியாபாரி ஒருவர், இதே மாதிரி நகைகளை சிலர் வாங்கி வந்து எங்களிடம் சோதிக்கின்றனர். அவை ஒரிஜனல் என்பதை தெரிந்து கொண்டு மற்ற நகைளைகளையும் வாங்கி ஏமாந்து விடுகின்றனர். எத்தனை சதுரங்க வேட்டை படம் வந்தாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள் என சலிப்புடன் கூறினார்.