டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் திருவண்ணாமலை அரசு மையத்தில் படித்த 20 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதன்மை தேர்வுக்கான பயிற்சி அடுத்த மாதம் தொடங்குகிறது.
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு உதவி புரியும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கத்துடன் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் 1999-ஆம் ஆண்டு தன்னார்வ பயிலும் வட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
அரசுத்துறையில் வேலை பெற நினைக்கும் இளைஞர்கள் படிக்கும் திறனை மேம்படுத்த இந்த பயிற்சி மையங்கள் உதவி புரிந்து வருகின்றது. இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் 500க்கும் மேற்பட்டவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர், சார் பதிவாளர், வருவாய் உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 5413 பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக இத் தேர்வு நடைபெற்றது.
தேர்வு முடிவுகள் கடந்த 8ந் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தில் இலவசப் பயிற்சி வகுப்பில் படித்த இளைஞர்கள் 20 பேர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதன்முறையாக இம்மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் 20 பேர் தேர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தில் இலவசப் பயிற்சி வகுப்பில் படித்த இளைஞர்கள் 20 பேர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்குக்கான முதன்மைத் தேர்வு வரும் 25.02.2023 அன்று நடத்த தேர்வாணையத்தால் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் 30.11.2022 முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி தொகுதி-2 ல் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 30.11.2022 அன்று முதல் நடைபெறவுள்ள தொகுதி-2 -க்கான முதன்மைத் தேர்வு (Group-II Mains) இலவச பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.
விருப்பமுள்ளவர்கள் 04175-233381 என்ற தொலைப்பேசி எண்ணில் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.