சேவூர் ராமச்சந்திரனிடம் அமைச்சர் வேலுவை பற்றி பேசாதது ஏன்? என கேட்டு அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆரணியில் கடந்த 12ந் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலுவை, ஆரணி நகரமன்ற துணைத் தலைவர் பாரிபாபு ஒருமையில் பேசியதால் திமுகவினர் ஆத்திரம் அடைந்தனர்.
திமுக-அதிமுக பரஸ்பரம் புகார்
இதையடுத்து பாரிபாபுவுக்கு சொந்தமான பாரி ஸ்வீட் கடைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன்(அதிமுக முன்னாள் அமைச்சர்) அலுவலகத்தின் முன் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது சம்மந்தமாக இருதரப்பினரும் ஆரணி போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று கண்ணமங்கலத்தில் பேரூராட்சி அலுவலகம் எதிரில், திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆரணியில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து சிறிது தூரத்தில் தங்களது கட்சி நிர்வாகி அலுவலகத்தில் திமுகவினரும் அதிக அளவில் திரண்டிருந்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.
சாதனையை பேசிய எம்.எல்.ஏ
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கொளத்தூர் திருமால், கஜேந்திரன், நகரமன்ற துணைத் தலைவர் பாரிபாபு, ஆரணி நகர செயலாளர் அசோக்குமார், வழக்கறிஞர் சங்கர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்பே அதிமுக நிர்வாகிகளிடம், அமைச்சர் வேலுவை பற்றி பேச வேண்டாம் என சேவூர் ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் குழம்பிய நிர்வாகிகள், அமைச்சரையும், கடையில் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் குறித்தும் சேவூர் ராமச்சந்திரனே கடைசியாக பேசுவார் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் சேவூர் ராமச்சந்திரனோ, தான் அமைச்சராக இருந்த போது நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பேசி விட்டு ஆர்ப்பாட்டத்தை, தனது சாதனை விளக்க கூட்டமாக மாற்றி விட்டார். ஆரணியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து அவர் ஏதும் பேசாததால் அதிமுக நிர்வாகிகள் ஆத்திரம் அடைந்தனர்.
சேவூர் ராமச்சந்திரனிடம் வாக்குவாதம்
ஆர்ப்பாட்டம் முடிந்து அங்கிருந்த அதிமுக அலுவலகத்திற்கு சேவூர் ராமச்சந்திரன் சென்றதும் அவரை ஒரு பிடிபிடித்தனர். தைரியம் இருந்தால் மேடையில் பேசுங்கள் என்று ஆபாசமாக சமூக வளைதளங்களில் திமுக ஐ.டிவிங் சார்பில் பதிவிடுகின்றனர். ஆனால் வேலுவை பற்றியும், திமுகவை பற்றியும் எங்களையும் பேச விடவில்லை, நீங்களும் பேசவில்லை. இதற்கு என்ன அர்த்தம். அப்போ திமுகவினர் சொல்வது போல் நாங்க பொட்டைபசங்களா?
ஏன் கடையில் புகுந்து அடிக்கிறீர்கள் என ஏன் கேட்கவில்லை அமைச்சராக இருந்த போது செய்ததை சொல்லி நீங்கள் ஏன் செய்யவில்லை என ஏன் வேலுவை கேட்கவில்லை. ரூ.500 கோடி திட்டங்களை செய்தேன் என சொல்வதனால் நாம் ஆட்சிக்கு வந்து விட்டோமா? இன்னும் அதையே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? என கேட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஒன்றிய செயலாளர்கள் திருமால், கஜேந்திரன் மற்றும் பாரிபாபு ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு சேவூர்ராமச்சந்திரன் பதிலளிக்காமல் மவுனமாக இருந்தார்.
பிறகு சேவூர் ராமச்சந்திரனை அவருடன் வந்தவர்கள் அழைத்துச் சென்றனர்.