மகாதீபத்திற்கு தமிழக கவர்னர் உள்பட 4 மாநில கவர்னர்கள் வருகிறார்களா? என்ற கேள்விக்கு கலெக்டர் பதிலளித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
மகாதீபத்திற்கு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அண்ணாமலையார் கோயில், கிரிவலப்பாதை, தற்காலிக பஸ் நிலையங்கள் ஆகியவற்றில் கலெக்டர் முருகேஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மகாதீபத்திற்கு வரலாறு காணாத ஏற்பாடு
இந்த வருடம் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரலாறு காணாத அதிகபட்ச முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது கூடுதலாக குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
2500 துப்புரவு பணியாளர்களை கொண்டு தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அடிப்படை வசதிகள் மற்றும் தூய்மை பணிகளை கண்காணிக்க 650 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் 5, 6, 7 ஆகிய மூன்று நாட்களும் பணியாற்றுவார்கள்.
பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் நபர்களை கண்காணிக்கவும் காவல்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தீபத் திருவிழாவுக்கு 12,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 13 தற்காலிக பஸ் நிலையங்களில் காவல் உதவி மையங்கள், குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
58 இடங்களில் கார் பார்க்கிங் இடங்களிலும் தூய்மை பணி உள்ளிட்ட அடிப்படை வசதி செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பஸ் நிலையிலிருந்து கோயில் செல்லும் பாதை மட்டும் கிரிவலப் பாதை ஆகியவற்றிலும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு துப்புரவு பணி நடக்கிறது. 85 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
எல்லா இடங்களிலும் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் கழிவறை எங்கு உள்ளது? குடிநீர் வசதி எங்கு செய்யப்பட்டுள்ளது? எந்த இடத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது? என்ற தகவல்கள் இடம்பெறும். அதே போல் பொதுமக்கள் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதையும் தகவல் பலகையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மலை மீது கண்காணிப்பு
2500 பேர் மட்டுமே கோர்ட்டு உத்தரவுப்படி மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மலையேறுவதற்கு நாளை காலை 6 மணிக்கு தொடங்கி முதலில் வருவதற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும். அதில் பார்கோடு இடம் பெறும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே அந்த அனுமதி சீட்டை பயன்படுத்த முடியும்.
மலையேறும் பகுதியில் மூன்று இடங்களில் வனத்துறை மூலம் நுழைவுப் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மற்ற இடங்களில் யாரும் மலை ஏற முடியாது. அதேபோல் மகா தீபம் ஏற்றி முடிந்ததும் யாரெல்லாம் கீழே இறங்கி சென்று விட்டார்கள் என்பதை அனுமதி சீட்டில் உள்ள பார் கோடை வைத்து கண்டுபிடித்து விட முடியும்.
இந்த முறை தேரோட்டம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. அதேபோல் பரணி தீபம், மகா தீபம் நல்ல முறையில் நடந்தேறும். இதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஒத்துழைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனைவரும் பாதுகாப்பாக வந்து தரிசனம் முடித்துவிட்டு பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதுதான் மாவட்ட நிர்வாகத்தின் நோக்கம்.
கவர்னர் வருகிறாரா?
நம்ம திருவண்ணாமலையை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குப்பையை குப்பைத் தொட்டில் போட வேண்டும். அன்னதானத்தை வீணாக்கக் கூடாது. தேவையான அளவு மட்டுமே வாங்கி உண்ண வேண்டும். இதுதான் மாவட்ட நிர்வாகத்தின் தாழ்மையான வேண்டுகோள்.
எந்த வருடமும் இல்லாத அளவு இந்த வருடம் 43 சிறப்பு ரயில்கள் விடப்படுகிறது. இதனால் ரோடுகளில் போக்குவரத்து குறையும். எனவே இது ஒரு நல்ல விஷயம். பஸ்களும் கூடுதல் எண்ணிக்கையில் விடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மகாதீபத்தை தரிசிக்க தமிழ்நாடு உள்பட 4 மாநில கவர்னர்கள் வருவதாக கிடைத்த தகவல் குறித்து கலெக்டரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கலெக்டர் முருகேஷ், கவர்னர் வருகை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றார்.