தென்கைலாயம் எனப்படும் 4560 அடி உயர பருவதமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
மலைப்படுகடாம் எனும் சங்க நூலில் குறிப்பிடப்படும் நவிரமலை என்பதே தற்போது பர்வதமலை என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் அருகே தென்மகாதேவமங்கலம் பகுதியில் 5500 ஏக்கர் பரப்பளவில், 4560 அடி உயரத்தில் பர்வதமலை அமைந்துள்ளது.
இங்கு மல்லிகார்ஜுனரும், அம்பிகை பிரம்மராம்பிகையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகின்றனர். பர்வதமலைக்கு சென்றால் பாவங்கள் போகும், ஈசன் நினைத்ததை நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.
பவுர்ணமி நாளன்று அதிக அளவிலான பக்தர்கள் மலையேறி ஈசனை தரிசிக்கின்றனர். மேலும் அன்றைய தினத்தில் கிரிவலமும் செல்வார்கள்.
தென்கைலாயம்
தென்கைலாயம் என்று அழைக்கப்படும் பருவதமலையில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது. இதற்காக சுமார் மூன்றரை அடி உயரம் கொண்ட கொப்பரைக்கு மலையடிவாரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நெய் மற்றும் தீபம் ஏற்றப்படும் காடா துணிக்கு பரிகார பூஜைகள் நடைபெற்றது.
இந்த பூஜையில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், அதிமுக பிரமுகர் மாதிமங்கலம் துரை, வனச்சரகர் சுரேஷ், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஹரிஹரன், ஒன்றிய குழு உறுப்பினர் அன்பரசி ராஜசேகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் எழில்மாறன், வித்யாபிரசன்னா, பத்மாவதி, பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அரோகரா கோஷம்
பர்வதமலை உச்சியில் வைக்கப்பட்ட கொப்பரையில் நேற்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. அரோகரா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபத்தை தரிசித்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று பவுர்ணமியை யொட்டி அதிக அளவில் பக்தர்கள் பருவமலைக்கு வருவார்கள் என்பதால் அங்கேயே முகாமிட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகளை செய்து தரும்படி அதிகாரிகளை சரவணன் எம்.எல்.ஏ கேட்டுக் கொண்டுள்ளார்.