திமுக பிரமுகரோடு அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று ரஜினிகாந்த் பெயரில் அவரது அண்ணன் சத்தியநாராணய ராவ் கெய்க்வாட் அர்ச்சனை செய்தார்.
கடந்த 12ந் தேதி நடிகர் ரஜினிகாந்த தனது 72வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அவரது ரசிகர்கள் அன்னதானம் வழங்கியும், கோயில்களில் வழிபாடு நடத்தியும், கேக் வெட்டியும் பிறந்த நாளை கொண்டாடினர்.
திருவண்ணாமலையில் பேகோபுரம் எதிரில் உள்ள தருமசாலையில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் டி.எம்.சண்முகம் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கும், சிவனடியார்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.
கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களை வரவேற்றும், ரஜினியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தும் அவரது ரசிகர்கள், அர்த்தநாரீஸ்வரர் மற்றும் ரஜினிகாந்த் படத்தோடு உள்ள போஸ்டர்களை கிரிவலப்பாதை மற்றும் திருவண்ணாமலை நகரத்தில் ஓட்டியிருந்தனர்.
கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ந் தேதி திருவண்ணாமலை அய்யங்குளம் எதிரில் உள்ள அருணகிரிநாதர் கோயிலில் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ அவரது அண்ணன் சத்தியநாராணய ராவ் கெய்க்வாட் சிறப்பு யாகம் நடத்தியிருந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தம்பி(ரஜினி) கட்சி தொடங்குவதற்காகவும் இந்த யாகம் நடத்தப்பட்டதாக வைத்துக் கொள்ளலாம். திராவிட கட்சிகளுக்கு கடைசி காலம் வந்து விட்டது, கடவுள் இல்லை என்கின்றனர், சாமிகளை திட்டுகின்றனர். இந்த நாடே சக்தி பீடம். எந்த மதமாக இருந்தாலும் மதிக்க வேண்டும், அவமதிக்க கூடாது என்றார்.
அதன் பிறகு ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை கைவிட்டார் என்பது தெரிந்த விஷயம். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது என்பது இறைவனிடம்தான் உள்ளது என அவரது அண்ணன் சத்தியநாராணய ராவ் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது பிறந்த நாளையொட்டி ரஜினிகாந்த் கடந்த வியாழக்கிழமை திருப்பதி கோயிலில் வழிபாடு செய்தார். அவரது அண்ணன் சத்தியநாராணய ராவ் திருவண்ணாமலை பகுதிகளில் உள்ள கோயில்களில் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ அர்ச்சனை செய்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று அவர் தரிசனம் செய்தார். தனது வருகை ரஜினி ரசிகர்களுக்கு தெரிய கூடாது என்ற கண்டிஷனோடு திருவண்ணாமலைக்கு வந்த அவரை திருவண்ணாமலை திமுக பிரமுகரும், நகரமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் செந்தில் கோயிலுக்கு அழைத்து வந்திருந்தார்.
அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மன் சன்னதிகளில் ரஜினிகாந்த் பெயரிலும், தனது பெயரிலும் சத்தியநாராணய ராவ் அர்ச்சனை செய்தார். ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியடையவும் அவர் அண்ணாமலையாரிடம் வேண்டிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
சென்ற முறை ரசிகர்களோடு திருவண்ணாமலையில் யாகம் வளர்த்து வழிபட்ட சத்தியநாராணய ராவ் இம்முறை தனது வருகை ரஜினி ரசிகர்களுக்கு தெரிய கூடாது என்ற நிபந்தனையுடன் வந்து சென்றது ரசிகர் மன்ற நிர்வாகிளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி நகரமன்ற உறுப்பினர் மா.செந்திலிடம் கேட்ட போது நானும் ரஜினி ரசிகர்தான். எனது உறவினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ரஜனி அண்ணன் சத்தியநாராயண ராவை கோயிலுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். ரஜினி மன்ற நிர்வாகிகளை அவர் தவிர்த்தது குறித்து எனக்கு ஏதும் தெரியாது என கூறினார்.
பிறகு சத்தியநாராணய ராவ் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு ஆதி திருவரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலிலும், திருக்கோயிலூரில் உள்ள உலகளந்த பெருமாள் கோயிலும், அந்திலி நரசிம்மர் கோயிலிலும் ரஜினிகாந்த் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார்.
தொடர்புடைய செய்தி…