மகாதீபத்திற்கு பேஸ் ரெகக்னிஷன் சாப்ட்வேர் மூலம் 35 லட்சம் பக்தர்கள் வருகை தந்ததாக கண்டறிப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மகாதீபத்திற்கு செய்யப்பட்ட வசதிகள் குறித்தும், பணியாற்றிய அனைவருக்கும் நன்றியும் தெரிவித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி.
தேருக்கு 5 லட்சம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது 3ந் தேதி நடைபெற்ற மகாரதத்தின் போது 5 லட்சம் பக்தர்களும், 6ந் தேதி பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஏற்றப்பட்ட போது தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 35 லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர்.
அதிக தள ஆய்வுகள்
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெறும் தீபத்திருவிழா என்பதால் கடந்த காலங்களை விட அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதன் அடிப்படையில் இந்த ஆண்டு தீபத்திருவிழா ஏற்பாடுகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்னரே துவங்கப்பட்டது. தொடர் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டதுடன்அதிக தள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆண்டு முதன் முறையாக தீயணைப்பு துறை Sky Lift வாகனம் மூலம் ராஜகோபுரம் உள்ளிட்ட 4 கோபுரங்கள் சுத்தம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டுகளை விட அதிக எண்ணிக்கையில் அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்பட்டது.
கண்காணிக்க 96 குழுக்கள்
176 இடங்களில் குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டது. 92 இடங்களில் 330 கழிப்பறைகள் அமைக்கப்பட்டது. கண்காணிக்க 96 குழுக்கள் அமைக்கப்பட்டன. 4300 தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தூய்மை பணிக்காக அமைக்கப்பட்ட குழுவினர் உடனுக்குடன் தூய்மை பணியினை மேற்கொண்டு குப்பைகளை அகற்றியதுடன் கிரிவலப் பாதை உள்ளிட்ட அனைத்து இடங்களையும் தூய்மையாக வைத்திருந்தனர்.
பேருந்துகள் 6520 நடைகள் இயக்கப்பட்டு சுமார் 6 லட்சம் பக்தர்கள் பயணம் செய்துள்ளனர். 5ந் தேதி முதல் 8ந் தேதி வரை 36 சிறப்பு ரயில்கள் உட்பட 75 ரயில்கள் இயக்கப்பட்டன. பேருந்துகள் கட்டணமின்றி Shuttle Services ஆக இயக்கப்பட்டது.
20 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்
101 இடங்களில் அன்னதானம் செய்ய 240 விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 6ந் தேதி மட்டும் சுமார் 20,52,470 பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ முகாம்களில் 7.5 லட்சம் பக்தர்கள் பயன்பெற்றுள்ளனர். ரூ.7.24 லட்சம் மதிப்பிலான மாத்திரை மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 13,061 காவலர்கள் ஈடுபட்டனர். கூட்டத்தில் தொலைந்த 14 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மகாதீபத்திற்கு 35 லட்சம் பக்தர்கள்
இந்த ஆண்டு Face Precognition Software (முகம் அடையாளம் காணும் மென்பொருள்) வாயிலாக செய்த கணக்கெடுப்பில் தீபத்திருவிழாவிற்காக 35 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பு அறை ஏற்படுத்தப்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 75 பணியாளர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணி புரிந்தனர்.
தமிழ்நாடு அரசால் செய்யப்பட்ட விழா ஏற்பாடுகளுக்கு மகிழ்ச்சியையும் வரவேற்பு தெரிவித்ததுடன் இந்த வசதிகளை முறையாக பயன்படுத்தி ஒத்துழைப்பு அளித்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
மனமார்ந்த நன்றி
இந்த விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து தர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததுடன் மாவட்ட நிர்வாகத்தினை தொடர்ந்து வழிநடத்திய தமிழ்நாடு முதலமைச்சர், பொதுப் பணித் துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற பேரவை துணைத் தலைவர், தலைமை செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர், உள்ளிட்ட அரசு துறை செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருவிழாவிற்காக வருகை தந்த 35 லட்சம் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள், தூய்மை பணிகள் சிறப்பாக செய்த அனைத்து அரசு துறைகளை சார்ந்த அலுவலர்கள் மற்றம் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பணியாளர்கள், தன்னார்வலர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், அன்னதானம் அளித்தவர்கள், வியாபாரிகள் சங்கம், உணவக விடுதி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஊடகத் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.