கிரிவலப்பாதையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மதுரை, பழனி உள்ளிட்ட கோயில்களின் பிரசாதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீப விழாவையொட்டி கிரிவலப்பாதையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களின் பிரசாதங்கள் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி. சந்திரமோகன், கூடுதல் ஆணையர் இரா.கண்ணன், துணை ஆணையர் ஹரிஹரன், அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி இணை ஆணையர் (நாகப்பட்டினம்) க. ராமு உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாக்களுக்கு வரும் பக்தர்களுக்கு மற்ற கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் கிடைப்பதற்காக முதன்முறையாக கடந்த மகா சிவராத்திரி தினத்தன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் பிரசாத விற்பனை நிலையம் தொடங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 2வதாக திருவண்ணாமலையில் நடைபெறும் தீபத் திருவிழாவில் அதே போன்று பிரசாத நிலையம் மற்றும் ஆன்மீக புத்தக விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பிரசாத விற்பனை நிலையம், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் குபேரலிங்கம் அருகே அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் பஞ்சாமிர்தம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குங்குமம், கள்ளழகர் கோயில் சம்பா தோசை, தேன்குழல், அப்பம், அதிரசம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் பிரசாதம் மற்றும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் லட்டு, முறுக்கு, மிளகு வடை பிரசாதங்கள் பக்தர்களுக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு ஆன்மீகப் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையில் தமிழகத்தில் உள்ள மற்ற கோவில்களின் பிரசாதங்கள் ஒரே இடத்தில் கிடைப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
8ந் தேதி வரை விற்பனை
கிரிவலப்பாதையில் அமைந்துள்ள இந்த பிரசாத விற்பனை நிலையம் நாளை 8ந் தேதி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.