சாமியார் சாப்பாடு, சுற்று கோயில் பூஜை என 100 ஆண்டு கால பராம்பரிய வழக்கத்தை தொடர்ந்து வருகின்றனர் திருவண்ணாமலை செவ்வா மடத்தினர்.
இது பற்றிய விவரம் வருமாறு,
திருவண்ணாமலை சன்னதி தெருவில் அமைந்துள்ளது தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சங்கத்திற்கு சொந்தமான செவ்வா மடம். இம்மடத்தின் உறுப்பினர்களாக சென்னை, காஞ்சிபுரம் பகுதியை சுற்றியுள்ள 100 கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
காஞ்சிபுரம் காமராஜர் தெருவில் தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சங்கத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.
இந்த சமுதாயம் சார்பில் திருவண்ணாமலையில் 100 ஆண்டு காலத்திற்கும் மேலாக கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி அண்ணாமலையார் கோயில் மூலவருக்கு அபிஷேக பொருட்களை வழங்குவது மற்றும் சாமியார் சாப்பாடு, சுற்று கோயில் பூஜையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
அபிஷேக பொருட்கள்
கார்த்திகை தீபத்திருவிழா எல்லை காவல் தெய்வ வழிபாடு துவங்கும் முன் நூற்றுக்கணக்கானோர் தங்களது ஊரிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்து தங்களது மடமான செவ்வா மடத்தில் தங்கினர். அண்ணாமலையார் கோயில் கட்டளைதாரர்களான இச்சமுதாயத்தினர் தினமும் உற்சவருக்கு அபிஷேக பொருட்களை(உச்சிகால கட்டளை) வழங்கினார்கள்.
ரூ.20 லட்சத்தில் அன்னதானம்
மேலும் செவ்வா மடத்தில் கார்த்திகை தீபத் திருவிழா முடிந்து அண்ணாமலையார் கிரிவலம் வரும் வரை சமுதாய மக்களுக்கும், பக்தர்களுக்கும் தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சங்கத்தின் தலைவர் தில்லை பாஸ்கர், செயலாளர் என்.புருஷோத்தமன், பொருளாளர் ஜி.கார்த்திகேயன் மேற்பார்வையில் ரூ.20 லட்சம் செலவில் அன்னதானம் வழங்கப்பட்டது.
சாமியார் சாப்பாடு
தொடர்ந்து சாமியார் சாப்பாடு எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவனடியார்கள் உட்கார வைக்கப்பட்டு அவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. சிவனடியார்கள் சாப்பிட்ட இலையை சமுதாய மக்கள் எடுத்ததோடு அவர்களது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். சிவனடியார்களுக்கு வஸ்திரதானம் வழங்கப்பட்டது.
சுற்று கோயில் பூஜை
அண்ணாமலையார் கிரிவலம் வந்த நாளில் இவர்கள் அனைவரும் மாட்டுவண்டியில் சென்று சுற்று கோயில் பூஜையை நடத்தினர். முதல் லிங்கமான இந்திரலிங்கத்திற்கு பூஜை செய்து சுற்று கோயில் பூஜையை தொடங்கினர். அஷ்டலிங்கம் மற்றும் முக்கிய கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
100 ஆண்டு காலத்திற்கும் மேலாக பாரம்பரியத்தை கைவிடாமல் இவர்கள் சாமியார் சாப்பாடு மற்றும் மாட்டு வண்டியில் சென்று சுற்று கோயில் பூஜையை நடத்தி வருகின்றனர்.
2 கிலோ தங்க ஆபரணம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கடந்த 2019ம் ஆண்டு தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சங்கம் சார்பில் ரூ.70 லட்சம் மதிப்பிலான 2 கிலோ எடையுள்ள ஸ்ரீஅருண வில்வ ஆரம் அண்ணாமலையாருக்கும், ஸ்ரீசெண்பக ஆரம் உண்ணாமுலையம்மனுக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.