திருவண்ணாமலையில் அன்னை சமுதாய கல்லூரி மாணவ-மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
12வது ஆண்டு விழா
திருவண்ணாமலை, திருக்கோவிலூர், வேட்டவலம், கண்டாச்சிபுரம், மரக்காணம், திண்டிவனம், விழப்புரம் ஆகிய ஊர்களில் அன்னை சமுதாய கல்லூரி இயங்கி வருகிறது. செவிலியர் மற்றும் ஓட்டல் நிர்வாகம் குறித்த பாட வகுப்புகள் இங்கு நடத்தப்பட்டு வருகின்றன.
இக்கல்லூரியின் 12வது ஆண்டு விழா, பெற்றோர்களுக்கு பாதபூஜை நடத்துதல், பட்டயச் சான்றிதழ் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா திருவண்ணாமலை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
துணை சபாநாயகர்
விழாவிற்கு வந்த அனைவரையும் கல்லூரியின் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் எம்.சரவணன் வரவேற்றார். கல்லூரியின் நிர்வாக இயக்குநரும், வேட்டவலம் லயன்ஸ் சங்க பொருளாளருமான சரவணன் ரங்கநாதன் தலைமை தாங்கினார். கல்லூரி நிறுவனர் சம்ஷாத்பேகம் சரவணன், முதல்வர் ரகு ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவை தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து 150 மாணவ-மாணவியர்களுக்கு பட்டயச் சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவில் அரிமா சங்க நிர்வாகிகள் எஸ்.மகேஷ், ஜி.நரசிம்மன், டி.அரவிந்த்குமார், எஸ்.மதியழகன், ஆர்.அன்பரசு, பி.இளங்கோவன், சி.எஸ்.துரை, இ.விஜய் ஆனந்த், எஸ்.யோகமூர்த்தி, ஆர்.மூர்த்தி, எஸ்.எஸ்.இஸ்மாயில், வி.வெங்கடேசன், சென்னை அப்பலோ மருத்துவமனையைச் சேர்ந்த டி.சிவகுரு, திமுக ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம், நகர செயலாளர் பி.முருகையன் உள்பட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பெற்றோர்கள் ஆனந்த கண்ணீர்
இதைத் தொடர்ந்து பாத பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நூற்றுக்கணக்கான மாணவ-மாணவியர்களின் பெற்றோர்கள் கழுத்தில் மாலை அணிவிக்கப்பட்டு நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டனர்.
முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ-மாணவியர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடையவும், பல்வேறு நலன்களை பெறவும் தங்களது பெற்றோர்களின் கால்களை கழுவி மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்தனர்.
பிறகு அவர்களது கால்களை தொட்டு வணங்கினர். இதைப்பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்த பெற்றோர்கள் பிள்ளைகளை ஆசீர்வதித்தனர். இச்சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
முடிவில் கல்லூரி கிளை மேலாளர் சி.கீர்த்தனா நன்றி கூறினார்.
விழாவில் அன்னை சமுதாய கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவ-மாணவியர்கள், பெற்றோர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.