கிரிவலப்பாதையில் நடைபாதையை தோண்டி பள்ளம் ஏற்படுத்தியவர் மீது போலீசில் புகார் கொடுக்க அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா ஏற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (3.12.2022) நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது,
கார்த்திகை தீப திருவிழாவிற்கு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீர் வசதி முறையாக வழங்கப்படுகிறதா? என்று கண்காணிக்க வேண்டும், கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளை தூய்மையாக பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கழிவறைகளுக்கு தேவைப்படும் தண்ணீர் உடனுக்குடன் வழங்கும் வசதியினை நகராட்சி நிர்வாகத்தின் மூலமாக ஏற்படுத்திதர வேண்டும். கிரிவலப்பாதையில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் சேகரித்து வைக்க வேண்டும்.
3000 தூய்மைப்பணியாளர்கள்
இந்தாண்டு அன்னதானம் வழங்குவதற்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டவர்களில் 230 நபர்களுக்கு மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அன்னதானப் பகுதிகளில் மட்டுமே அன்னதானம் நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும்,
தூய்மைப்பணிகள் தொய்வின்றி போர்க்கால அடிப்படையில் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி தற்காலிக பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதையும், ஒரே நேரம் அதிக பேருந்துகள் வெளியே சென்று அடுத்த பேருந்து வர காலதாமதம் ஏற்படும் நிகழ்வுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த வருடமும் இல்லாத வகையில் பக்தர்களின் வகதிக்காக 28 சிறப்பு இரயில்கள் தற்போது இயக்கப்பட உள்ளது.
தற்காலிக பேருந்து நிலையத்திற்கு அடிப்படை தேவைகள் குடிநீர், கழிவறை, மின்விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தூய்மையான முறையில் தூய்மை பணியாளர்களை கொண்டு பேருந்து நிறுத்தத்தை தூய்மையான முறையில் வைத்திருக்க வேண்டும். தூய்மை பணிகள் மேற்கொள்வதற்கு என 3000 தூய்மைப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இனி வரும் காலங்களில் நிரந்தரமாக கிரிவலப்பாதை முழுவதும் தினந்தோறும் தூய்மைப்படுத்தும் பணியில் சாலைப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மேலும் காவல் துறையின் சார்பாக வடக்கு மண்டல காவல் துறை தலைவர் தலைமையில் 4 சரக காவல் துறை துணைத் தலைவர், 27 மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள், மற்றும் இந்த மாவட்டத்தில் பணிபுரிந்த உயர் அதிகாரிகள் மேற்பார்வை பணிகள் மேற்கொள்வதற்காக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அந்தந்த மாவட்டத்திலிருந்து குற்றத்தடுப்பு காவலர்கள் சாதாரண உடையில் பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர். சந்தேகப்படக்கூடிய நபர்களை கண்காணித்து குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.
5000 நபர்களின் தகவல்கள் சேகரிப்பு
கோயில் பகுதி மற்றும் கிரிவலப்பாதையில் வசித்து வரும் வெளிநாட்டவர்கள் உட்பட 5000 நபர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்களின் விவரங்கள் அனைத்தும் காவல் துறையின் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதே போல் அடையாள அட்டை வைத்திருக்கும் பொது மக்கள் மற்றும் பக்தர்கள் எந்தவித தங்கு தடையின்றி பரணி தீபம், மகாதீபம் மலையேறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்தாண்டு பாதுகாப்பு பணிக்காக மொத்தம் 12,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுத்தப்பட உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக காவல்துறை மூலமாக 40 விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பர வாகனங்கள் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு கோபுரங்களின் நுழைவு வாயில்களிலும் பக்தர்கள் எளிதில் அறியும் வகையில் வகையில் அடையாளக்குறியீடு பதாகைகள் அமைக்க வேண்டும்.
காவலர்களின் வாகனங்கள் பக்கதர்களுக்கு எந்தவொரு இடையூறும் இல்லாமல் காவல் துறைக்கு வாகனங்கள் நிறுத்துவற்கான இடங்களிலேயே வாகனங்கள் நிறுத்த வேண்டும். உயர்நீதி மன்றத்தின் உத்தரவின்படி 2500 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
மலையேறும் பக்தர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு 3 மருத்துவக்குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியில் உதவி செய்ய முன்வரும் தனியார் குழுக்களும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 14 கி.மீ கிரிவலப்பாதை மற்றும் கோயில் வளாகத்திலும் 108 அவசர சேவை ஊர்தி எப்போதும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
பிறகு தீபத்திருவிழாவினை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையினை அமைச்சர் பார்வையிட்டார்.
தண்ணீர் வராத குழாய்
இதனை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு, கிரிவலப்பாதையில் அண்ணா நுழைவு வாயில் அருகில் ஈசான்ய மைதானம், அடிஅண்ணாமலை, வருணலிங்கம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களின் அடிப்படை வசதிகளான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை வசதிகள், நடைபாதை உள்ளிட்டவைகள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அடிஅண்ணாமலை ஊராட்சியில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பைப்பை திறந்து பார்த்தார். ஆனால் அதில் தண்ணீர் வரவில்லை. இதனால் அதிகாரிகள் பதட்டம் அடைந்தனர். அடைப்பின் காரணமாக தண்ணீர் வராததை அமைச்சரே கண்டு பிடித்து உடனடியாக அதை சரி செய்ய உத்தரவிட்டார்.
பிறகு அதற்கு எதிர்புறம் உள்ள டைல்ஸ் நடைபாதை சென்று அமைச்சர் வேலு பார்வையிட்டார். அப்போது ஒரு இடத்தில் டைல்ஸ் நடைபாதை 3 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டிருந்தது. இதை தோண்டியது யார்?, எதற்காக தோண்டியுள்ளனர்? என அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டார். பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திருதிருவென விழித்தனர்.
அப்பகுதி ரோடு இன்ஸ்பெக்டரை அழைத்து அமைச்சர் கேட்டதற்கு அவரும் தெரியாது என பதிலளித்தார். இதனால் டென்ஷனான அமைச்சர், இது அரசாங்க சொத்து, பள்ளம் தோண்டிவர்கள் மீது போலீசில் புகார் கொடுங்கள் என உத்தரவிட்டார்.
பள்ளம் தோண்டப்பட்டது எப்படி?
அமைச்சருடன் சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கி.கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, சரவணன், கூடுதல் ஆட்சியர் வீர்பிரதாப்சிங், நகராட்சி ஆணையாளர் ரா.முருகேசன், கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், நெடுஞ்சாலை துறை திருவண்ணாமலை வட்ட கண்காணிப்பாளர் பழனிவேல், கோட்ட கண்காணிப்பாளர் க.முரளி, மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், நகர திமுக செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் மற்றும் அதிகாரிகள் சென்றிருந்தனர்.
கிரிவலப்பாதையில் தீவிர கண்காணிப்பு பணியில் அதிகாரிகளும், போலீசாரும் ஈடுபடுத்தபட்டிருக்கிற நிலையில் அவர்களுக்கு தெரியாமல் பள்ளம் தோண்டப்பட்டது எப்படி? என்ற கேள்வி பக்தர்களின் மனதில் எழுந்துள்ளது.