திருவண்ணாமலை வளர திட்டமிட வேண்டும், ஏழை மாணவர்கள் உயர்கல்வி படித்திட உதவிகளை செய்ய வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலுவுக்கும், அவரது மகன் கம்பனுக்கும் விஐடி வேந்தர் விசுவநாதன் கோரிக்கை விடுத்தார்.
ஸ்டெர்லிங் நிறுவனம்
சுற்றுலா மற்றும் ஆன்மீக பயணம் மேற்கொள்பவர்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய தங்குமிடத்தை தரும் முன்னணி நிறுவனமாக ஸ்டெர்லிங் ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் கால்பதித்துள்ளது. இங்கு செங்கம் ரோட்டில் உள்ள பிரபல ஓட்டலான அருணை ஆனந்தாவுடன் இணைந்து தனது ரிசார்ட்டை அமைத்துள்ளது.
இந்த ஸ்டெர்லிங் ரிசார்ட்டின் துவக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு வேலூர் விஐடி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் ப. முருகேஷ், அருணை மருத்துவ கல்லூரி இயக்குனர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி ரிசார்ட்டை துவக்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், ஆணாய்பிறந்தான் ஊராட்சி மன்றத் தலைவர் தருமராஜ், 25வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ஸ்ரீதேவி பழனி, ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மண்ணுலிங்கம், சிவஞானம், சுவாதி லாட்ஜ் பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அனைவரையும் ஸ்டெர்லிங்கின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் லால்வானி வரவேற்றார். முடிவில் ஜெம்ஸ்பார்க் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் மற்றும் அருணை ஆனந்தா ரிசார்டின் உரிமையாளர் எஸ். ரவீந்திரன் நன்றி கூறினார்.
வளங்கள் இல்லா சிங்கப்பூர்
விழாவில் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் பேசியதாவது:-
கலெக்டர் இங்கு பேசும் போது திருவண்ணாமலைக்கு முக்கியமான நாட்கள் மட்டுமின்றி வாரந்தோறும் மக்கள் அதிக அளவில் வருகிறார்கள் என்றார். சட்டமன்ற துணைத் தலைவர் பேசும்போது சிறு நாடுகளில் சுற்றுலா எப்படி வளர்க்கப்படுகிறது, அதை வைத்து பொருளாதாரம் எப்படி வளர்கிறது என்பதையும் கூறினார்.
சிங்கப்பூரில் எந்த வளங்களும் இல்லை. குடிதண்ணீர் கூட பக்கத்து நாட்டிலிருந்து தான் வர வேண்டும். அந்த நாடு இன்றைக்கு பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. அங்கு சுற்றுலா பணிகள் அதிக அளவில் வருகின்றனர். அதை அந்த நாடு பயன்படுத்திக் கொள்கிறது. துறைமுகங்கள், விமான நிலையங்களை வளர்த்து விட்டார்கள்.
திருவண்ணாமலைக்கு யாரும் கூப்பிடாமலேயே அதிகம் பேர் வருகின்றனர். அதற்குக் காரணம் நமது முன்னோர்கள் கட்டிய கோயில் ஆகும். பல்லாயிரக்கணக்கான கோயில்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் சில கோயில்கள்தான் ஆயிரம் ஆண்டுகளை கடந்த கோயில்கள் ஆகும்.
வளர்வதற்கு வாய்ப்புள்ள நகரம்
அந்த வகையில் 1100 ஆண்டுகளைக் கடந்தது திருவண்ணாமலை கோயிலாகும். அதுமட்டுமன்றி மற்ற கோவிலுக்கு வருபவர்களை விட அதிகமாக வேறு மாநிலங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு வருபவர்கள் அதிகம். அதை எவ்வாறு நாம் பயன்படுத்தி, அதை வைத்து திருவண்ணாமலை நகரம் மட்டுமின்றி இந்த பகுதியையும் மாவட்டத்தையும் வளர்க்க முடியும் என்பதை திட்டமிட்டு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திருவண்ணாமலை வளர்வதற்கு வாய்ப்புள்ள ஒரு நல்ல நகரம். இங்கு வருகின்றவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் நாம் செய்ய வேண்டும். அவர்களுக்கு என்னென்ன தேவைகள் என்பதை கண்டறிந்து அவர்களை திருப்தி படுத்துவது மட்டுமின்றி அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் அதற்கு நாம் எல்லாவிதமான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இன்னொன்று இந்த கோயில் மட்டுமல்லாமல் அவர்களை வைத்து வேறு என்னென்ன வளர்க்க முடியும் என ஆராய்ந்து அதை செய்ய வேண்டும். இதை அமைச்சருக்கு அவரது மகன் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன். அரசு மூலம் இன்னும் என்னென்ன செய்ய முடியும் என்பதை திட்டமிட வேண்டும்.
திருவண்ணாமலைக்கு வருபவர்கள் ஒரு நாள் மட்டும் வந்து விட்டுப் போகாமல் 2, 3 நாட்கள் தங்குகிறபடி செய்தால் வருமானம் பெருகும். அதன் விளைவாக பொருளாதாரம் மேம்படும்.
திருவண்ணாமலை மிகவும் பின்தங்கிய பகுதி. வட ஆற்காடு, தென்னாற்காடு, தருமபுரி ஆகியவை கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கி உள்ள பகுதிகளாகும். 30, 40 ஆண்டுகளாக தான் படிக்க ஆரம்பித்துள்ளோம். அதன் பிறகுதான் இங்கு இருக்கிற கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் எல்லாம் வளர ஆரம்பித்துள்ளன.
7 ஆயிரம் பேருக்கு உயர்கல்வி
38 ஆண்டுகளுக்கு முன்னால் 150 மாணவர்களோடு துவக்கிய வேலூர் பொறியியல் கல்லூரி நிறுவனம் 80 ஆயிரம் மாணவர்கள் படிக்கக்கூடிய நிறுவனமாக மாறி உள்ளது. வேலூர், சென்னை, ஆந்திராவில் உள்ள அமராவதி, மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் ஆகிய நான்கு பகுதிகளில் விஐடி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது
அதேபோல் அருணை குழும நிறுவனங்களும் வளரும் என எதிர்பார்க்கிறேன். அதுவும் பல்கலைக்கழகமாக மாறுகிற வாய்ப்புள்ளது. அப்போது இவர்(கம்பன்) துணை வேந்தராக பதவியேற்பார். நான் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக அமைச்சராக இருந்ததை விட இந்த கல்வித் துறையில் ஆண்டுதோறும் ஒரு பத்தாயிரம் பேருக்கு வேலை வாங்கி கொடுப்பதை சிறந்ததாக கருதுகிறேன்
ஒரு நபர் உயர்கல்வி பெற்றால் அந்த குடும்பமே வளர்ந்து விடுகிறது. ஆக எல்லோருமே கற்றால் என்ன ஆகும் அந்த சமுதாய மேலே போய்விடும். நாடும் மேலே போய்விடும். அது இந்த பகுதியிலும் நடக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
வேலூர் மாவட்டத்தில் ஒரு முயற்சி எடுத்திருக்கிறோம். அனைவருக்கும் உயர்கல்விஅறக்கட்டளை என்பது துவக்கி 9 ஆண்டுகளாகிறது. அதில் 10 மற்றும் 12ம் வகுப்பு நின்று விடும் மாணவர்களிடத்தில் பெரும்பாலும் பெண்களிடத்தில் பேசி அவர்களை ஏதாவது ஒரு உயர் கல்வி படிக்க வைக்கிறோம். இதுவரை 7ஆயிரம் பேருக்கு உயர்கல்வி படிக்க நிதி வழங்கியிருக்கிறோம். அதில் மூன்றில் இரண்டு பங்கு மாணவிகள்.
இதன் மூலமாக குழந்தை திருமணம் தடுக்கப்படுகிறது. அதே போல் இந்த பகுதியிலும் நடக்க வேண்டும் என விரும்புகிறேன் அதை கம்பன் ஆரம்பிக்க வேண்டும். அதற்கு பிச்சாண்டி உதவி செய்ய வேண்டும். நானும் உடனிருந்து உதவி செய்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஏழை மற்றும் நடுத்தர மாணவ-மாணவிகள் உயர் கல்வி பயின்றிட உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மெட்ராஸ் வெங்காய பக்கோடா
ஸ்டெர்லிங் ரிசார்ட் தமிழ்நாட்டில் 8வது ரிசார்ட்டை திருவண்ணாமலையில் அமைத்துள்ளது. ஆன்மீகம், யாத்திரை சுற்றுலா மற்றும் திருமணங்கள், கார்ப்பரேட் நிகழ்வுகளுக்கும் ஏற்ற இடமாக இது விளங்குகிறது.
ஆன்மீகம், யோகா, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை விரும்புவோர் ஓய்வெடுக்கவும் புத்துயிர் பெறவும் இந்த இடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விசாலமாகவும், அழகு மிகுந்ததாகவும் நன்கு 30 அறைகள் உள்ள இந்த ரிசார்ட் பசுமையால் நிரம்பியுள்ளது மற்றும் ஆம்பிதியேட்டரும் (திறந்தவெளி அரங்கம்) உள்ளது.
‘அன்னம்’ என்ற சைவ உணவு விடுதி உள்ளது. மெட்ராஸ் வெங்காய பக்கோடா மற்றும் மிளகு பெரட்டல் போன்றவையும், ஜெயின் உணவு வகைகள் இங்கு ஸ்பெஷலாகும்.
அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை பற்றி தெரிந்து கொள்ள…
https://vit.ac.in/universal-higher-educaiton-trust-provides-rs-53-lakh