திருவண்ணாமலை ரிஜிஸ்டர் ஆபீசில் ஆண்களும், பெண்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள ரிஜிஸ்டர் ஆபீஸ் (இணைப்பதிவாளர் அலுவலகம்) உள்ளது. இந்த அலுவலகம் முன்பு ஆட்டோ நகர் சிறு தொழில் புரிவோர் வளர்ச்சி சங்கத்தினர் இன்று திடீரென தரையில் உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அச்சங்கத்தின் செயலாளர் ஜவகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திருவண்ணாமலை அருகே உள்ள இனாம்காரியந்தலில் ஒரு மினி தொழிற்பேட்டையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 2002-ம் ஆண்டு 16 ஏக்கர் 64 சென்ட் நிலத்தை வாங்கி பெயிண்டர், மெக்கானிக் என 14 தொழில் செய்பவர்களை கொண்டு ஆட்டோ நகர் சிறுதொழில் புரிவோர் வளர்ச்சி சங்கத்தை ஏற்படுத்தினோம்.
இச்சங்கத்தில் உறுப்பினராக இணைந்த 135 உறுப்பினர்களில் 100 உறுப்பினர்கள் நிலத்தை பதிவு செய்து கொண்டனர். மீதி 35 பேர் பணம் பற்றாக்குறையின் காரணமாக பதிவு செய்யவில்லை. இந்நிலையில் அப்போது சங்கத்தில் நிர்வாகிகளாக இருந்தவர்கள் 30 ஆயிரம் சதுர அடி நிலத்தை முறைகேடாக பதிவு செய்தது குறித்து கோர்ட்டு உத்தரவின் பேரில் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் மீதம் உள்ள 35 பேரும் நிலத்தை பதிவு செய்ய தயாராக இருந்தனர். ஆனால் இடத்திற்கான மூலப்பத்திரம் பழைய நிர்வாகிகளிடம் இருந்ததால் இடத்தை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
100 பேருக்கு பத்திரம் பதிவு செய்த இடத்தில்தான் விடுபட்ட 35 பேருக்கும் இடம் உள்ளது. எனவே 100 பேருக்கு பதிவு செய்தது போல 35 பேருக்கும் இடத்தை பதிவு செய்து தரும்படி கேட்டோம். அசல் மூலப்பத்திரம் இருந்தால்தான் பதிவு செய்து தர முடியும் என ரிஜிஸ்டர் ஆபீசில் மறுத்து விட்டனர்.
எனவே 35 பேருக்கும் இடத்தை பதிவு செய்து தரும்படி வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து இணைப்பதிவாளர் அ.குமரகுரு கூறுகையில் வழக்குகள் உள்ளதால் எங்களால் எதுவும் செய்ய இயலாது என தெரிவித்தார்.
இந்நிலையில் ரிஜிஸ்டர் ஆபீஸ் வளாகத்தில் பேராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 50 பேர் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். மாலை 5 மணியளவில் அவர்கள் அனைவரும் ஆபீசில் நுழைந்து அங்கு தரையில் உட்கார்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அலுவலக வேலைகள் பாதிக்கப்பட்டன.
தகவல் கிடைத்ததும் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலிருந்து குணசீலன் என்பவர் வந்து போராட்டம் நடத்தியவர்களோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். போலீஸ் அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தினர். இரவு வரை இந்த பேச்சு வார்த்தை தொடர்ந்தது. பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
இது சம்மந்தமாக சங்கத்தின் செயலாளர் ஜவகரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு மாலை 5 மணியிலிருந்து இரவு 8-15 மணி வரை ரிஜிஸ்டர் ஆபீசுக்குள் சென்று காத்திருப்பு போராட்டத்தை நடத்தினோம். திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறும் சிறப்பு மனு விசாரணை முகாமில் மனு அளிக்கும்படியும், இதன் பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் சொன்னதன் பேரில் போராட்டத்தை விலக்கிக் கொண்டோம் என்றார்.
ஆட்டோ நகர் சிறு தொழில் புரிவோர் வளர்ச்சி சங்கத்தினர் நடத்திய போராட்டத்தினால் காலை முதல் இரவு வரை ரிஜிஸ்டர் ஆபீசில் பரபரப்பு நிலவியது.