4 கிராம் கொண்ட கஞ்சா பொட்டலத்தை ரூ.300க்கு விற்பனை செய்து கொண்டிருந்த சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அண்ணாமலையாரே மலை வடிவில் காட்சி அளித்து வருவதாக கருதி பவுணர்மி மற்றும தீப திருவிழா நாட்களில் லட்சக்கணக்கிலும், தினமும் ஆயிரக்கணக்கிலும் பக்தர்கள் மலையை வலம் வருகின்றனர்.
கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது போன்று சாமியார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. சாதுக்கள் என்ற போர்வையில் சிலர் கஞ்சா மற்றும் மது போதையில் பக்தர்களிடம் வசூல் வேட்டையிலும் இறங்கி விடுகின்றனர்.
சாதுக்கள் என்ற போர்வையில் சமூக விரோதிகள் ஊடுறுவதை தடுக்க சாதுக்களை கணக்கெடுத்து அவர்களுடைய விவரங்கள், புகைப்படங்களை சேகரித்து க்யு ஆர் கோடு(விரைவு தகவல் குறியீடு)டன் கூடிய அடையாள அட்டை வழங்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
கிரிவலப்பாதையில் அமெரிக்க பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து அத்துமீற முயன்ற மணிகண்டன் என்ற சாமியார் கைது செய்யப்பட்ட சம்பவம், ஆந்திர மாநில இளைஞர் ஒருவர் பல மணி நேரமாக கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம், சமீபத்தில் கஞ்சா போதையில் சாமியார் ஒருவர் கடைகளை அடித்து நொறுக்கிய சம்பவம் ஆகியவை பரபரப்பை ஏற்படுத்தி பக்தர்களை அதிர்ச்சி அடையச் செய்தன.
இதையடுத்து கிரிவலப்பாதையில் சமூக விரோத செயல்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த சாமியாரை சில நாட்களாக நோட்டம் விட்டனர். ஒரு கட்டத்தில் சாதாரண உடையணிந்து கஞ்சா வாங்குவது போல் அவரை அணுகினர். அப்போது அவர் தனது பையில் கஞ்சா பாக்கெட்டுகளை வைத்து விற்பனை செய்து வந்ததை கண்டு பிடித்து அவரை கையுங்களவுமாக பிடித்தனர்.
அவரது பெயர் ஆறுமுகம் (வயது 48), ஸ்ரீவி நகர், அறந்தாங்கி தாலுகா, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆந்திர மாநிலத்திலிருந்து அவர் 1 கிலோ கஞ்சாவை ரூ.7500க்கு வாங்கி வந்து அதை 4 கிராம் கொண்ட பொட்டலமாக கட்டி கிரிவலப்பாதையில் ரூ.300க்கு விற்பனை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
போலீசார் இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். மேலும் அவர் மீது வேறு ஏதாவது குற்ற வழக்குகள் உள்ளனவா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.