கோயில் நிர்வாகி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
திருவண்ணாமலை-செங்கம் சாலையில் விசிறி சாமியார் ஆசிரமம் பின்புறம் அமைந்துள்ள சர்வேஷா நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). விசுவ இந்து பரிஷத் பூசாரிகள் அமைப்பின் மாநில செயலாளராக உள்ளார். கிரிவல பாதையில் ஈசானிய லிங்கம் அருகே அம்மணியம்மன் சித்தர் பீடம் என்ற கோயிலை நடத்தி வருகிறார்.
வேலூரில் நேற்று நடந்த தனது மைத்துனரின் திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக ரமேஷ் வீட்டை பூட்டிக் கொண்டு மனைவி, பிள்ளைகளோடு சென்றிருந்தார்.
விழாவில் கலந்து கொண்டு விட்டு இன்று காலை திருவண்ணாமலைக்கு திரும்பினார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே வந்த போது காலை 7 மணியளவில் வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அருகில் குடியிருப்பவர் ரமேஷ்க்கு போனில் தகவல் தெரிவித்தார்.
வீட்டிற்கு சென்று பார்த்த போது பக்கவாட்டு ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து படுக்கறையின் பீரோவையும் உடைத்து அதில் இருந்த 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 ஆயிரத்தை கொள்ளையடித்துக் கொண்டு சென்று விட்டது தெரிய வந்தது.
இது குறித்து ரமேஷ், திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். சுந்தராஜ் தலைமையிலான கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். கைவரிசை காட்டிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளை நடந்தால் மோப்ப நாய் வரவழைக்கப்படுவது வழக்கமாக உள்ள நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் மோப்ப நாய் வரவழைக்கப்படவில்லை.
வீட்டின் கதவை உடைத்து கொள்ளையர்கள் வராததால் பூஜை அறையில் இருந்த வெள்ளி பொருட்கள் கொள்ளையர்களின் பார்வையில் இருந்து தப்பியுள்ளது.
கோயில் நிர்வாகி வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.