போட்டித் தேர்வு பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியம் ரூ.400-லிருந்து ரூ.800-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், தமிழ், ஆங்கில வழிகளில் வகுப்புகள் நடத்துவதற்கு தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
டி.என்.பி.எஸ்.சி., டி.என்.யூ.எஸ்.ஆர்.பி., எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி.இ ஐ.பி.பி.எஸ்., டி.ஆர்.பி., போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் இங்கு நடத்தப்படுகின்றன. இப்பயிற்சி வகுப்புகள் மூலம் ஆண்டுதோறும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயிற்சி பெறுகின்றனர்.
இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தும் பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியமாக ஒரு மணி நேரத்துக்கு ரூ.400-இல் இருந்து ரூ.800 வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்புக்கும் பிபிடி, மதிப்பீட்டு வினாக்கள், மாதிரித் தேர்வு வினாக்கள் தயார் செய்து தரவேண்டும்.
எனவே, மதிப்பூதியத்துக்கு தகுந்தபடி ஒவ்வொரு தேர்வுக்கும் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளைக் கையாளும் வகையில், தரமான பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விருப்பமுள்ள பயிற்றுநர்கள் https://bit.ly/facultyregistrationform என்ற கூகுள் இணைப்பில் விண்ணப்பத்தை நிறைவு செய்து ஜனவரி 10-க்குள் விண்ணப்பிக்கலாம்.
போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி முன் அனுபவம் பெற்றவர்கள், முன்னாள் மாணவர்கள், போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தமிழ், ஆங்கில வழிகளில் வகுப்புகள் நடத்துவதற்குத் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நேர்காணலுக்கு அழைக்கும்போது தயார் செய்த பாடக் குறிப்புகள், மாதிரி வினாக்கள் தொடர்புடைய பாடத்தின் பிபிடி ((PPT) ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை தொடர்புடைய பாடத்தில் ஏதேனும் ஒரு தலைப்பில் மாதிரி வகுப்பு நடத்தப்பட வேண்டும்.
விருப்பமும், தகுதியும் உள்ள பயிற்றுநர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தற்குறிப்பு (Resume) அனைத்துக் கல்வி சான்றிதழ்களுடன் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு 04175-233381 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.