ஜாமீனில் வெளிவந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளரை கைது செய்ய 7 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் போலீசை வசைபாடிய அக்கட்சியை சேர்ந்த 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர். இதனிடையே மாவட்ட காவல்துறை பெயரில் வெளிவந்த அறிவிப்பு போலியானது என்றும், அதிகாரபூர்வமானது அல்ல என்றும் போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஆரணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலக கட்டிடம் சம்மந்தமாக ஆரணி நகர போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து இருதரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், போலீசாரை சாதியை சொல்லி திட்டியது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
போலீஸ் நிலையம் முன்பு
இதையடுத்து பாஸ்கரனையும், ஒன்றிய செயலாளர் ரமேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பாஸ்கரனை தலைப்பாகை, மாலைகள் அணிவித்து திறந்த ஜீப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆரணி நகர வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது வழிநெடுகிலும் அஞ்சமாட்டோம், அஞ்சமாட்டோம், அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம், ஆதிக்கசாதி வெறியர்களே, கைகூலிகளே, காக்கிச் சட்டை நா…ளே என்ற கோஷங்களை எழுப்பியபடி வந்தனர்.
போலீஸ் நிலையம் எதிரில் நின்று வெளியே வாடா, வெளியே வாடா, தைரியம் இருந்தால் வெளியே வாடா என காவல்துறையை இழிவுபடுத்தும் வாசகங்ளை பயன்படுத்தி கோஷம் எழுப்பினர். அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதோடு காவல்துறையை இழிவுபடுத்தியதற்கு அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
தனிப்படை அமைப்பு
இந்நிலையில் போலீசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் 9 பேரை கைது செய்தனர். பாஸ்கரன் உள்பட முக்கிய நிர்வாகிகளை கைது செய்ய 7 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மாவட்ட காவல்துறை பெயரில் பாஸ்கரன் உள்பட 4 பேரின் பெயர்கள், படங்களை பிரசுரித்து இவர்களை பற்றி தெரிந்தால் தகவல் தெரிவிக்கும்படியான அறிவிப்பு நோட்டீஸ் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதில் தொடர்பு கொள்ள ஆரணி, வந்தவாசி டிஎஸ்பி அலுவலக எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட செய்தி அல்ல என மாவட்ட காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை
காவல்துறையினரை அவதூறாக பேசிய தங்களது கூட்டணி கட்சியினர் மீது காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது டிவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.