Homeஆன்மீகம்கொடியேற்றம், ஆருத்ரா, பவுர்ணமி- களை கட்டிய திருவண்ணாமலை

கொடியேற்றம், ஆருத்ரா, பவுர்ணமி- களை கட்டிய திருவண்ணாமலை

கொடியேற்றம், ஆருத்ரா, பவுர்ணமியால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் லிங்கப் பரம்பொருள் சிவபெருமானுக்கு திருவிழா என்றால் மார்கழித் திருவாதிரை அன்று எல்லோருக்கும் ஆனந்தம் அருளும் ஆனந்தக் கூத்தன் நடராஜ பெருமானுக்கு திருவிழாவாகும்.

திருநடனக் காட்சி

சிதம்பரத்தில் பூஜையும் வேள்வியும் செய்து நடராஜரின் திருச்சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்து பொன்னம்பலம் ஆக்கி வழிபட்டுத் தொழுதுத் துதித்துப் போற்றிய அரி அயன் அம்மன் முதலிய தெய்வங்கள் அனைவருக்கும் சிவலோக ஆனந்தக் கூத்தன் திருநடனக் காட்சி அருளிய திருநாளே ஆருத்ரா தரிசனம் எனப்படும் மார்கழித் திருவாதிரைத் திருநாள் ஆகும்.

ஈசனுக்கு ஆதிரையான் என்று அருள் நாமம். திருவாதிரை நட்சத்திரத்திற்கு சமஸ்கிருதத்தில் ஆருத்ரா என்று பெயர். கார்த்திகை தீபம் போல் பழங் காலத்திலிருந்து இலக்கியங்களில் போற்றப்படும் தூய தமிழர்த் திருவிழா ஆருத்ரா தரிசனமாகும். திருவாதிரைத் திருநாள் திருவெம்பாவைத் திருவிழாவோடு சேர்ந்து அமையும் இரட்டைத் திருவிழாவாகும்.

கொடியேற்றம், ஆருத்ரா, பவுர்ணமி- களை கட்டிய திருவண்ணாமலை

ஐந்தொழில்

நடராஜருடைய திருவுருவ அமைப்பானது, சிவபெருமானே, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலையும் செய்பவர் என்ற உண்மையை வெளிப்படுத்துவதாகும் எனத் தெய்வ மறைநூல்கள் உணர்த்துகின்றன.

வலக்கரத்துள்ள உடுக்கையில் தோன்றும் ஒலியிலிருந்து, இயங்கும் பொருள்கள், இயங்காப் பொருள்கள் அனைத்தையும் இறைவன் தோற்றுவிக்கிறார் என்ற உண்மையை உடுக்கை ஏந்திய கரம் விளக்குகிறது. அபயகரம் அமைதிக் குறியைக் காட்டுகிறது. அங்ஙனமே யாகுக! என்பதைக் காட்டி, உலகம் முழுவதும் மாறாமலும் தவறாமலும் ஒழுங்காய்ப் பரிபாலனம் செய்யப்படுவதனை உணர்த்துகிறது. ஆகவே, இக்குறி காத்தல் தொழிலைக் காட்டுகிறது.

இடக்கையில் தாங்கியிருக்கும் தீ, எல்லாவுலகங்களையும் இறுதியில் அழித்து ஆன்மாக்களுக்கு ஓய்வு கொடுப்பவனும் இறைவனே என்பதனைக் காட்டுகிறது. ஊன்றிய வலக்கால், உயிர்கள் செய்த நல்வினை தீவினைகளுக்குத் தக்கவாறு, இன்ப துன்பங்களைத் துய்க்கும் வண்ணம் மறைக்க வேண்டியவற்றை மறைப்பவன் இறைவனே என்பதனை உணர்த்துகிறது.

தூக்கிய திருவடியை ஒரிடக்கை சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு சுட்டிக்காட்டுவது இறைவன் திருவடியன்றி உயிர்களுக்குப் புகலிடமில்லை. அத்திருவடியையடைவதற்கு முயலுங்கள் என்று ஞானாசாரியர் உபதேசிப்பது போல் காணப்படுகிறது. ஆகவே, தூக்கிய திருவடி இறைவன் செய்யும் ஐந்தொழில்களுள் அருளலைக் குறிக்கின்றது.

சிவபிரான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் செய்து ஆன்மாக்களுக்கு அருள் புரிந்து வருகிறார் என்ற உண்மையை நடராஜரின் திருவுருவம் விளக்குகிறது.

கொடியேற்றம், ஆருத்ரா, பவுர்ணமி- களை கட்டிய திருவண்ணாமலை

ஆருத்ரா தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடராஜ பெருமானுக்கு நடைபெறும் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆனி உத்தர நட்சத்திரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். இதே போல் மார்கழி திருவாதிரையன்று ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து திருவீதிக்கு எழுந்தருளுவார்.

அனைத்து சிவாலயங்களிலும் இன்று ஆருத்ரா தரிசன விழா விமர்சையாக நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று இரவு சிவகாமசுந்தரி சமேத அண்ணாமலையார் அலங்கார ரூபத்தில் எழுந்தருளினார்.

கொடியேற்றம், ஆருத்ரா, பவுர்ணமி- களை கட்டிய திருவண்ணாமலை

அங்கு இன்று அதிகாலை 4 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனையும் காலை 9 மணியளவில் விசேஷ பூஜைகளும் நடந்தது. கடந்த மாதம் 6ந் தேதி 2668 மலை உச்சியில் காட்சியளித்த மகாதீப கொப்பரையில் இருந்து பெறப்படட தீப மை நடராஜருக்கு அணிவிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர்.

பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக சிவகாமசுந்தரி சமேத நடராஜர் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உடன் மாணிக்க வாசகரும் வலம் வந்தார்.

கொடியேற்றம்

வெயில் தாக்கம் அதிகரிக்கக் கூடிய சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலமான உத்தராயண புண்ணிய காலத்தை வரவேற்கும் விதமாக அண்ணாமலையார் கோவிலில் அண்ணாமலையார் சன்னதிக்கு எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் இன்று கொடியேற்றப்பட்டது. அப்போது விநாயகர், அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கொடியேற்றம், ஆருத்ரா, பவுர்ணமி- களை கட்டிய திருவண்ணாமலை

கொடியேற்றத்தை தொடர்ந்து 10 நாட்களும் விநாயகர், சந்திரசேகரர் அம்பாளுடன் தனித்தனி வாகனங்களில் காலையும், மாலையும் மாட வீதிகளில் உலா வருவர். 10வது நாளான 15ந் தேதி தாமரைகுளத்தில் தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவடைகிறது.

மறுநாள் 16ந் தேதி மாட்டுபொங்கலன்று பிரசித்தி பெற்ற திருவூடல் திருவிழா நடைபெறும்.

மார்கழி பவுர்ணமி

இன்று அதிகாலை 2.26 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 4.20 மணிக்கு மார்கழி மாத பவுர்ணமி நிறைவடைகிறது.

கொடியேற்றம், ஆருத்ரா, பவுர்ணமி- களை கட்டிய திருவண்ணாமலை

ஆருத்ரா தரிசனம், உத்தராயண புண்ணிய கால கொடியேற்றம் மற்றும் பவுர்ணமி ஆகியவை ஒரே நாளில் வந்ததையொட்டி நேற்று இரவு முதலே பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வரத் தொடங்கினர். இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.


மேலும் பல ஆன்மீக செய்திகளுக்கு…

https://www.agnimurasu.com/spirituality

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!