தோளில் துண்டு அணிந்தால் என்னை அறியாமலே வீரம் வந்து விடுகிறது என அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
திருவண்ணாமலை-செங்கம் சாலை, அம்மாபாளையம் பெரியார் சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது.
இதில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது,
திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மாபாளையம், பவித்திரம், சே.கூடலூர், போளூர், செய்யாறு என 8 தொகுதிகளிலும் சமத்துவபுரம் உள்ளது ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் எங்கேயாவது பொங்கல் விழா நடத்தி பார்த்திருக்கிறீர்களா? அனைவரும் மகிழும் அளவு ஏதாவது நிகழ்ச்சி நடந்திருக்கிறதா?
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. அதனால்தான் சமத்துவபுரத்தில் விழா நடத்துகிறோம். ஆண், பெண் என 2 ஜாதி தான் உண்டு. பணக்கார ஜாதி, ஏழை ஜாதி என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அனைவரும் சமம் தான்.
அனைத்து ஜாதியும் ஒன்றுதான் என்று மேடையில் வாயால் சொல்வது முக்கியமல்ல. சமுதாயத்தில் அதை நிலை நாட்டுவதற்கு என்ன முயற்சி எடுத்தார்கள்? அதை மெய்பித்துக் காட்டிய ஒரே தலைவர் கலைஞர் தான். எனது ஊரில் சமத்துவபுரத்தில் நூறு வீடு கட்டி ஒதுக்கீடு செய்தேன். சமத்துவபுரம் பக்கத்திலேயே ஒரு ஐந்து ஏக்கர் நிலத்தை எடுத்து புதிதாக சமத்துவபுரம் அமைத்து எங்களை எல்லோரும் ஒன்றாக குடியமர்த்துங்கள் என இப்போது கேட்கிறார்கள். இது ஒரு பெரிய புரட்சி.
விவசாய பெருங்குடி மக்கள் கொண்டாடுவதுதான் பொங்கல். முதலாளி எல்லாம் கொண்டாட மாட்டார்கள். விவசாயியாக இருப்பவர்களுக்கு தண்ணீர் தேவை. தண்ணீர் இல்லை என்றால் எப்படி விவசாயம் செய்ய முடியும்? நான் ஒரு விவசாயி. மேடைக்கு வரும்போது துண்டு எடுத்து வந்தேன். தோளுக்கு அழகு துண்டு என்றார்கள்.
விவசாய பெருங்குடி மக்களுக்குத்தான் துண்டு அணிகிற பழக்கம் உண்டு. தலைப்பாகை கட்டுகிற பழக்கம் உண்டு. நான் ஒரு விவசாயி என்பதை மெய்ப்பித்து காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் தோளில் துண்டை போட்டிருக்கிறேன். தோளில் துண்டு அணிவதை பெருமையாக கருதுகிறேன். துண்டு கழுத்துக்கு வந்தாலே என்னை அறியாமலே வீரம் வந்து விடும் எனக்கு. ஏனென்றால் விவசாயி எவனுக்காகவும் தலை குனிபவன் அல்ல. தன்மானத்தோடு இருப்பவன் தான் விவசாயி. அந்த விவசாயிக்கு வேண்டியது நீர் ஆதாரம்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பயிர் உள்ளது ஈரோடுக்கு மஞ்சள், தென்பகுதியில் பருத்தி, நமது மாவட்டத்தின் பழக்க வழக்கம் மணிலா நெல், கரும்புதான். இப்படி மணிலா, நெல், கரும்புக்கு பேர் போன முதல் மாவட்டம் தமிழ்நாட்டிலேயே திருவண்ணாமலை தான். இங்கிருந்துதான் மற்ற மாவட்டங்களுக்கு மணிலா செல்லும். அதை உணர்ந்துதான் மாவட்ட ஆட்சியர் தலைவர் நிலத்தடி நீரை உயர்த்திட வேண்டும் என்ன திட்டங்களை தீட்டி வருகிறார். 1500 போர்வெல்கள் வீணாக உள்ளது. அவை செயல்பட நடவடிக்கை எடுத்து வருகிறார்.
நான் காலதாமதமாக வருவதனால் 10 மணிக்கு எழுந்திருக்கிற மந்திரி என நினைத்திருப்பார்கள். நான் ஐந்தரை மணிக்கு எழுந்திருக்கிற மந்திரி. அந்த காலத்தில் சே கூடலூரில் ஐந்தரை மணிக்கு எழுந்து பம்பு செட்டில் தண்ணீர் விட்டு முதல் ஏரை நான் பிடிப்பேன். முன் ஏரை ஒழுங்காக ஓட்ட வேண்டும், இல்லையென்றால் கோணல் கோணலாக ஆகிவிடும். சில பேர் நான் விவசாயின்னு பேசுவாங்க, வர சொல்லு என் கூட.
மாட்டுக்கு பாஷை இருக்கிறது தெரியுமா என விவசாயிகள் மாநாட்டிலே பேசினேன். நாம் ஏர் ஓட்டும் போது பே பே என்று சொன்னால் மாடு அலையும். சே என்று சொன்னால் ஓடும். இது மாட்டுக்கு உரிய பாஷை எத்தனை விவசாயிகளுக்கு தெரியும்?
எந்த வருஷம் இல்லாத அளவு இந்த வருஷம் எனது வீட்டிலேயே நான் பார்த்தேன். தமிழ்நாடு வாழ்க என கோலத்தில் இருந்தது. இதனால் அன்பு சகோதரிகளுக்கு கூட உணர்வு வந்திருக்கிறது.
சவுந்தர பாண்டியனார் என்பவர் நமது மண்ணுக்கு தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என உண்ணாவிரதம் இருந்து இறந்து போனார். அப்போது இருந்த அரசாங்கம் அதை கண்டு கொள்ளவில்லை. 67ல் திமுக ஆட்சிக்கு வந்த போது தான் தமிழ்நாடு என அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து சட்டம் இயற்றினார். சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் கடைசி வரைக்கும் இருக்க வேண்டும். அதை மாற்றுவதற்காக முயற்சி செய்கிறார்கள். இது தமிழ்நாடு கிடையாது, தமிழ் அகம், தமிழகம் என மாற்ற முயற்சிக்கிறார்கள். தமிழகம் என வேண்டுமென்றால் எழுதிக் கொள்ளலாம் தப்பில்லை. ஆனால் தமிழ்நாடு என்பது அரசியல் சட்டத்தில் இயற்றப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
பிறகு தமிழ்நாடு வாழ்க என அவர் 3 முறை சொல்ல பொதுமக்கள் அதை திருப்பி கூறினர்.
விழாவில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறுவர்களுக்கான கோணிப்பை ஓட்டம், தவளை ஓட்டம், பெரியவர்களுக்கான இசை நாற்காலி, மாணவர்களுக்கான 100 மீட்டர் ஒட்டப்பந்தயம், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், சமத்துவபுரத்தில் குடியிருப்போருக்கும் அமைச்சர் வேலு பரிசுகளை வழங்கினார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கத்தின் சார்பில் 10 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டு சமத்துவ பொங்கல் உறுதி மொழி ஏற்கப்பட்டது. .
விழாவில் சட்டமன்ற துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், எ.வ.வே.கம்பன், புதுப்பாளையம் ஒன்றியக்குழுத் தலைவர் சி.சுந்தரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.