ஏரி ஆக்கிரமிப்பு அகற்றும்போது உடன் வருமாறு எங்களை எப்படி அழைக்கலாம்? என கூறி கலெக்டருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குறைதீர்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மன்ற கூட்டரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, வேளாண் இணை இயக்குநர் அரக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) டாக்டர் உமாபதி, கோட்டாட்சியர் மந்தாகினி உள்பட அனைத்துதுறை அரசு அலுவலர்கள் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கலெக்டர் டென்ஷன்
கூட்டத்தில் பழைய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் பதிலளித்தனர். இதனால் கலெக்டர் டென்ஷன் ஆனார். பழைய மனுக்களுக்கு இப்போது பதில் அளித்தால் இப்போது வாங்கும் மனுக்கள் குறித்து எப்போது தெரிவிப்பீர்கள்?
வேளாண்மை துறையில் பழைய ஆட்களாக இருக்கிறீர்கள், இப்படி செய்யலாமா? விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என கோபமாக தெரிவித்தார்.
வியாபாரம் ஆகவில்லை
நார்த்தாம்பூண்டியைச் சேர்ந்த சரவணன் பேசுகையில் நார்த்தாம்பூண்டி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்த கலெக்டர் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் சரிவர வியாபாரம் ஆகாத சூழ்நிலையில் புதியதாக எப்படி அமைக்க முடியும்? என கேட்டார். நார்த்தாம்பூண்டி நெல் கொள்முதல் நிலையத்தில் ஏற்கனவே நெல் வரத்து அதிகமாக இருந்ததாக விவசாயி சரவணன் சுட்டிக் காட்டினார்.
இயற்கை விவசாயிகள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் எஸ்.ஆர். ஜாகீர்ஷா பேசுகையில் தானிப்பாடி அரசு மருத்துவமனையில் தற்போது ஒரு டாக்டர் மட்டுமே இருப்பதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகுகின்றனர். எனவே கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
விவசாயிகள் எதிர்ப்பு
முத்தகரம் பழனிசாமி பேசுகையில் ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியப்போக்கோடு நடந்து கொள்வதாகவும், குறிப்பாக வைப்பூர் ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.
அங்கு என்ன ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது? என கலெக்டர் கேட்டார். பயிர் செய்து வருவதாக பழனிசாமி பதில் அளித்தார். அப்படி என்றால் ஆக்கிரமிப்பு செய்திருப்பவர் விவசாயி தானே நீங்களே பேசி ஆக்கிரமிப்பை அகற்றியிருக்கலாமே? ஆக்கிரமிப்பு அகற்றும் போது எவ்வளவு போலீசார், அதிகாரிகள் வரவேண்டியிருக்கிறது? ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் போது விவசாயிகள் அனைவரும் வரவேண்டும் என தெரிவித்தார்,
இதற்கு விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நாங்கள் வரவேண்டும் என்றால் நீங்கள் எல்லாம் எதற்கு? யார் புகார் கொடுத்தார்கள் என்பதை ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்களிடம் போய் கச்சிதமாக அதிகாரிகள் தெரிவித்து விட்டு எங்களுக்குள் பகையை உருவாக்குகிறார்கள். இப்போது நீங்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் போது எங்களை உடன் வரும்படி அழைக்கிறீர்கள் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விஷ பாட்டல்
கூட்டத்தில் பங்கேற்ற தேவனாம்பட்டைச் சேர்ந்த விவசாயி ஒருவர் விஷ பாட்டலோடு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் அந்த பாட்டிலை சக விவசாயிகள் பறித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இரண்டு, மூன்று கூட்டங்களுக்கு கலெக்டர் வராததால், முகமே மறந்து விட்டது என விவசாயிகள் தெரிவித்தனர் அதற்கு அமைச்சர் நிகழ்ச்சி போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் இருந்ததால் வர முடியாமல் போய்விட்டது என கலெக்டர் தெரிவித்தார். உழவர்களால்தான் உலகமே இயங்குகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்,
ஏரி குளம் மற்றும் காவல்வாய் பகுதிகளில் தூர்வாருவதில்லை, எனவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும், யூரியா வாங்கும்போது உர விற்பனை நிலையங்களில் இணைப்பு பொருட்கள் கட்டாயம் வாங்க வேண்டுமென கட்டாயப்படுத்துகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.