தென்பெண்ணை ஆற்றுக்கு சன்னியாசிகள் சங்கத்தினரும், பொதுமக்களும் இணைந்து மகா ஆரத்தி விழாவை நடத்தினர்.
பாரதிய சன்னியாசிகள் சங்கம்
நதிகள் பாதுகாக்கப்பட வேண்டும், நதியை மக்கள் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் விழிப்புணர்வு யாத்திரை நடத்தி வருகிறது. ஒவ்வொரு நதியாக அந்த நதிகளின் பெயரிலான மாதா சிலையோடு சென்று மகா ஆரத்தி விழாவை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திருவண்ணாமலை அடுத்த சாத்தனூர் அணைக்கு நீர்வரத்தாக அமையும் தென்பெண்ணை ஆற்றுக்கு மகா ஆரத்தி வழிபாடு நடைபெற்று வருகிறது.
ரத யாத்திரை
பெங்களுர் அருகில் உள்ள நந்தி மலையில் துவங்கும் தென்பெண்ணை ஆறு, பரந்து, விரிந்து ஓடி கடலூர் சங்குமுகம் பகுதியில் குறுகி கடலில் கலக்கிறது. நந்தி மலையில் தொடங்கும் தென்பெண்ணையாற்றுக்கு பொதுமக்களோடு இணைந்து சன்னியாசிகள் சங்கத்தினர் மகா ஆரத்தியை நடத்தி ரத யாத்திரையை தொடங்கினர்.
நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை அருகே உள்ள கொலமஞ்சனூரில் ஓடும் தென்பெண்ணையாற்றுக்கு ஆரத்தி விழாவை நடத்தினர். இந்த ரத யாத்திரையை திருவண்ணாமலை மாவட்ட எல்லையான குபேரபட்டினம் அருகே ரதயாத்திரைக்கு அனுமதியில்லை என கூறி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு வந்த இந்து அமைப்பினரும், பாஜகவினரும் போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்பெண்ணை மாதா
பிறகு விழா அமைப்பினர் நடந்தே கொலமஞ்சனூர் தென்பெண்ணையாற்றுக்கு சென்று பூஜைகளை செய்தனர். நீரில் மஞ்சள், குங்குமம், விபூதி, பூக்கள் தூவியும், தேங்காய், பூ, பழம் வைத்தும் வழிபாடு நடத்தப்பட்டது. பிறகு காசியை போல் மகா ஆரத்தி காட்டப்பட்டது. அப்போது ஜெய், ஜெய் மாதா, தென்பெண்ணை மாதா என கோஷம் எழுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து பொதுமக்களும், விழா குழுவினரும் நதியை நோக்கி தீபராதனை காட்டினர். பிறகு பாக்கு தட்டில் மஞ்சள், குங்குமம், பூ வைத்து கற்பூரம் ஏற்றி நீரில் மிதக்க விட்டனர். ரதத்தை போலீசார் அனுமதிக்காததால் தென்பெண்ணை மாதா சிலை இல்லாமல் பூஜை நடத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்க நிர்வாக தலைவர் சாந்தலிங்க மருதாசல அடிகள், துணைத் தலைவர்கள் ராமானந்தா, குமரகுருபர சுவாமிகள், சம்பத்குமார மாமானுஜ ஜீயர், பொதுச் செயலாளர் சுவாமி ஆத்மானந்த ஸரஸ்வதி, பொருளாளர் வேதாந்த ஆனந்தா, அறங்காவலர்கள் சிவபிரம்மானந்த ஸரஸ்வதி, காளிஸ்வரானந்த ஸரஸ்வதி, சுத்தவித்யானந்த ஸரஸ்வதி, ஈஸ்வரானந்தா, பாஜக மாவட்டத் தலைவர் கே.ஆர்.பாலசுப்பிரமணியன், தருமன், ராஜலட்சுமி, கோவிந்தராஜ், ராஜ்குமார், சந்தோஷ் பரமசிவம், அறவாழி, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சரவணன், ஜெயபிரகாஷ், தட்சணாமூர்த்தி, தேவேந்திரன், செல்வம் உள்பட பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து பொதுச்செயலாளர் சுவாமி ஆத்மானந்த ஸரஸ்வதி கூறியதாவது,
காவிரி புஷ்கரம்
அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் கடந்த 2011 முதல் காவிரி நதி நீர் விழிப்புணர்வு யாத்திரையை நடத்தி வருகின்றது. காவிரி நதி உற்பத்தியாக கூடிய குடகிலிருந்து கடலில் கலக்கும் பூம்புகார் வரை இந்த யாத்திரையானது நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஐப்பசி மாதத்தில் இந்த யாத்திரை ஆனது நடைபெறுகிறது.
நதி பாதுகாக்கப்பட வேண்டும், மக்கள் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக இந்த யாத்திரை நடக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய காவிரி புஷ்கரம் என்ற நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினோம். அப்போதிலிருந்து காவிரி நதிக்கரையில் சுமார் 37 இடங்களில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆரத்தி நிகழ்வானது நடைபெற்று வருகிறது.
1 கோடியே 28 லட்சம் பேர்
இதைத்தொடர்ந்து 2018 தாமிரபரணி புஷ்கர நிகழ்ச்சியை நடத்தினோம். இதில் சுமார் 1 கோடியே 28 லட்சம் பேர் உலகம் முழுவதும் இருந்து வந்து தாமிரபரணி நதியில் ஸ்நானம் செய்தார்கள். இந்த எண்ணிக்கை அரசாங்கம் கணக்கு எடுத்துக் கொடுத்த எண்ணிக்கை, குறிப்பாக காவல்துறை.
2019-ல் வைகை நதிக்கு விழா எடுத்து மதுரையில் 12 நாட்கள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினோம். நாங்கள் விழா எடுத்த காலத்தில் இருந்து இன்று வரை வைகை நதியானது நகருக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றது. அதற்கு முன்பு 12 ஆண்டுகள் நகரில் ஓடாமல் இருந்தது வைகை நதி என்பது பதிவு செய்யப்பட்ட விஷயம்.
நந்தி மலை
2020 ஆம் ஆண்டு தென்பெண்ணை நதிக்கு விழா எடுக்க முடிவு செய்த காலத்தில் கொரோனா என்ற கொடிய நோய் வந்த காரணத்தால் இந்த நிகழ்ச்சியை சிறிய அளவில் நாங்கள் நடத்தினோம். 2021 கடைசியில் தென்பெண்ணை நதி உற்பத்தியாக கூடிய பெங்களுரு அருகில் இருக்கக்கூடிய நந்தி மலையில் துவங்கி கடலில் கலக்கும் கடலூர் வரை பாதயாத்திரை ரத யாத்திரை ஆகியவற்றை நடத்தினோம். அன்றிலிருந்து தற்பொழுது வரை தென்பெண்ணை நதி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது எப்பொழுதுமே இனி தொடர்ந்து ஓடும் என்பது எங்களுடைய எண்ணம். எங்களுடைய வேண்டுதலும் அதுதான்.
நதிக்கரை நாகரீகம்
எங்கெல்லாம் நதி சிறப்பாக ஓடி கொண்டு இருக்கிறதோ அதனுடைய கரையில் இருக்கக்கூடிய மக்கள் சிறப்பாக வாழ்கின்றார்கள் என்பது தான் வரலாறு. உலகம் முழுவதுமே நதிக்கரை நாகரீகம் தான். இந்த நிகழ்வுகளில் நாங்கள் மதம் பார்ப்பதில்லை. யாரெல்லாம் தண்ணீரை உபயோகப்படுத்துகிறார்களோ அவர்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டுதான் விழாக்களை நடத்தி வருகின்றோம்.
கடந்த ஆண்டு பாலாறு நதிக்கான விழாவானது வேலூரில் நடைபெற்றது. விழாவிற்கு ஆறு மாதத்திற்கு முன்பு மாதத்திற்கு ஒரு கூட்டத்தை நடத்தினோம். கூட்டம் நடத்த ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை அந்த நதியானது ஓடிக்கொண்டிருக்கின்றது. இதுவும் பதிவு செய்யப்பட்ட ஒன்று.
இவ்வாறு சுவாமி ஆத்மானந்த ஸரஸ்வதி கூறினார்.
மேலும் ஆன்மீக செய்திகளுக்கு…