டெய்லர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
திருவண்ணாமலை நல்லவன்பாளையம், சமுத்திரம் கிராமம் பர்கத் நகரில் வசித்து வந்தவர் ஆறுமுகம்(53). மனைவி பெயர் பிரபாவதி(45) காட்டாம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். ஆறுமுகம், திருவூடல் தெருவில் மோர் சூப்பர் மார்க்கெட் அருகில் நியூயார்க் என்ற பெயரில் டெய்லர் கடை நடத்தி வந்தார்.
ஆறுமுகத்தின் பெயரில் சொத்துக்கள் உள்ளன. மேலும் அவர் பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த 7ந் தேதி இரவு ஆறுமுகம், மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
தாமரை நகரில் சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் ஆறுமுகத்தை மடக்கி அவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் ஆறுமுகத்தின் உடல் இருப்பதை அந்த பகுதியாக வந்தவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து திருவண்ணாமலை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டி.எஸ்.பி குணசேகரன் தலைமையிலான தனிப்படையினர் கொலையாளிகளை தேடி வந்தனர். கொலை நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றினர். அதில் அந்த நேரத்தில் ஹெல்மெட் அணிந்தபடி 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் அந்த பகுதி வழியாக சென்ற காட்சிகள் பதிவாகின. மேலும் அப்பகுதியில் செல்போன் டவரில் பதிவான எண்களை கொண்டும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
ஆறுமுகத்தின் வீடு மற்றும் கடைகளில் இருந்த ஏராளமான ஆவணங்களை எடுத்துச் சென்ற போலீசார் அதில் சம்மந்தப்பட்ட நபர்களை அழைத்து விசாரித்தனர். அதில் திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி ரோட்டில் உள்ள வரகூர் கிராமத்தைச் சேர்ந்த பரந்தாமன்(40) என்பவரும் ஒருவர். போலீஸ் விசாரணையில் தனக்கும், ஆறுமுகம் கொலைக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என சொல்லி விட்டு சென்ற பரந்தாமன் மீது போலீசின் சந்தேகப்பார்வை விழுந்தது.
போலீசார் வைத்த பொறியில் பரந்தாமன் சிக்கினார். அவர் தனக்கு தெரிந்தவர்களை கொண்டு கொலையை அரங்கேற்றியது விசாரணையில் தெரிய வந்தது.
2 கார்களை சொந்தமாக வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்த பரந்தாமனுக்கு, ஆறுமுகம் பணம் கடனாக கொடுத்துள்ளார். இதில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை அவர் திருப்பி தராமல் இருந்து வந்ததாகவும், பணத்தை திருப்பி தரக் கேட்டு பரந்தாமனின் வீட்டிற்கு சென்று ஆறுமுகம் கேட்ட போது இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த பரந்தாமன் ஆறுமுகத்தை தீர்த்து கட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து பரந்தாமனையும், கலசபாக்கம் வட்டம் சாலையனூர் கிராமத்தைச் சேர்ந்த பாரதி(22), திருவண்ணாமலை கரையான் செட்டி தெருவைச் சேர்ந்த தமிழரசன் (20), திருவண்ணாமலை எம்.ஜி.ஆர் நகர் குளத்துமேட்டு தெருவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்கிற பூனை (20) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் திருவண்ணாமலை குற்றவியல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு மாஜிஸ்திரேட்டு கவியரசன் உத்தரவின் பேரில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
கொலை செய்வதற்காக பயன்படுத்திய அவர்கள் 2 வீச்சருவாள், 2 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.