மஞ்சு விரட்டு விழா நடைபெறுவதையொட்டி கலசப்பாக்கம் பகுதியில் உள்ள கிராமங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் அணிவகுப்பு நடைபெற்றது.
திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் தொகுதி ஆதமங்கலம் புதூர், வீரளூர், கடலாடி, கீழ்பாலூர், மேல்பாலூர், கிடாம்பாளையம், மேலாரணி, சேங்கபுத்தேரி, மற்றும் பல இடங்களில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வருடந்தோறும் மஞ்சு விரட்டு விழா நடைபெறுவது வழக்கம்.
இதற்காக தங்களுக்கு சொந்தமான காளைகளை அதன் உரிமையாளர்கள், வண்ண, வண்ண சேலை மற்றும் பூக்களால் அலங்கரித்து போட்டியில் பங்கேற்க செய்வார்கள். இந்த மஞ்சு விரட்டு விழாவை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் விழா நடைபெறும் ஊர்களில் திரளுவார்கள்.
காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் பரிசு பொருட்களை இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு தட்டிச் செல்வர். சென்ற ஆண்டு மஞ்சு விரட்டு விழாவில் மோதல்கள் ஏற்பட்டது.
எனவே இந்த ஆண்டு மோதல்களை தடுப்பதற்காக போலீசார் இன்று திடீர் அணிவகுப்பை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 4 டி.எஸ்.பிகள், 5 இன்ஸ்பெக்டர்கள் என 350 போலீசார்கள் பங்கேற்ற அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், ஆயுதப்படை போலீசாரும் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு மோதல்கள் ஏற்பட்ட கடலாடி, ஆதமங்கலம் புதூர், கேட்டவாரம்பாளையம், கீழ்பாலூர் ஆகிய கிராமங்களில் அணிவகுப்பு நடைபெற்றது. நூற்றுக்கணக்கான போலீசார் கிராமங்களில் முக்கிய வீதிகள் வழியாக வரிசை கட்டி சென்றதை எதற்காக இவ்வளவு போலீசார் வந்திருக்கின்றனர் என பொதுமக்கள் புரியாமல் பார்த்தனர். பிறகு அலுவலர்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
போகி தொடங்கி பொங்கல் பண்டிகை உள்பட மொத்தம் 6 நாட்களுக்கு மஞ்சு விரட்டு விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விழா நடைபெறும் கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மஞ்சு விரட்டு விழாவையொட்டி கலசப்பாக்கம் பகுதியில் உள்ள கிராமங்களில் முதன்முறையாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் அணிவகுப்பு நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.