மருமகன் கொலை செய்யப்பட்டு 21 நாட்கள் ஆன நிலையில் மாமனாரும் விபத்தில் பலியாகி உள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை சமுத்திரம் கிராமம் பர்கத் நகரில் வசித்து வந்தவர் ஆர்.கே.ராமு (வயது 72). டெய்லராக இருந்து வந்தார். காங்கிரஸ் கட்சி பிரமுகர். நேற்று 28ந் தேதி இரவு இவர் நல்லவன்பாளையம் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போடுவதற்காக ஸ்கூட்டரில் சென்றார்.
சாலை பணியாளர்
பெட்ரோல் பங்கிற்கு திரும்பி போது எதிரே வந்த மற்றொரு ஸ்கூட்டர், ராமுவின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது. இதில் 2 வண்டிகளிலிருந்து வந்தவர்களும் தூக்கியெறிப்பட்டனர். 2 பேரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு ராமு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த இன்னொருவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது பெயர் சுப்பிரமணி(52). திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவைச் சேர்ந்தவர். நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருமகன் கொலை
இறந்த ராமுவிற்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். மூத்த மகள் காட்டாம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். மற்றொரு மகள் திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நர்சாக உள்ளார். மகன் வெளிநாட்டில் உள்ளார்.
மூத்த மகளின் கணவர் ஆறுமுகம் பணத் தகராறில் கடந்த 7ந் தேதி சனிக்கிழமை அன்று திருவண்ணாமலை தாமரை நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மருமகன் கொலை செய்யப்பட்ட நிலையில் மாமனாரும் விபத்தில் பலியாகி உள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.