திருவண்ணாமலை ஜோதி மார்க்கெட்டில் வாடகையை 200 மடங்கு உயர்த்திய நகராட்சியை கண்டித்து ரோட்டில் பூக்களை கொட்டி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சிக்கு சொந்தமாக மொத்தம் 440 கடைகள் உள்ளன. இதில் தற்போது 360 கடைகள் செயல்பாட்டில் இருக்கின்றன. தேரடித் தெருவில் பூ மார்க்கெட் இயங்கி வரும் ஜோதி மார்க்கெட்டில் மட்டும் 130 கடைகள் உள்ளன. இந்த கடைதாரர்களிடமிருந்து நகராட்சிக்கு ரூ.5 கோடியே 80 லட்சம் வாடகை பாக்கி வர வேண்டியது உள்ளது.
இந்த பாக்கியை வசூலிப்பதற்காக நகராட்சி அதிகாரிகள் ஜோதி மார்க்கெட்டுக்கு சென்றனர். அப்போது அவர்கள் பாக்கி அதிகம் உள்ள கடைகளை பூட்டி சீல் வைக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து வியாபாரிகள் சங்கத் தலைவர் டி.எம்.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழக அரசு வாடகையை குறைக்க ஒரு குழுவை அமைத்துள்ள நிலையில் திருவண்ணாமலை நகராட்சி திடீரென வாடகையை 200 மடங்கு அளவு உயர்த்தியுள்ளது. தரை வாடகையை ரூ.800லிருந்து ரூ.8ஆயிரமாகவும், கடைகளுக்கு ரூ.1200லிருந்து ரூ.12ஆயிரமாகவும் உயர்த்தப்பட்ட போது அமைச்சர் எ.வ.வேலுவிடம் முறையிட்டோம். முதலில் 50 சதவீத வாடகையை கட்டுங்கள், மீதியை வாடகையை குறைத்த பிறகு பேசிக் கொள்ளலாம் என அவர் நகராட்சி ஆணையாளரிடம் கூறினார்.
ஆனால் திடீரென தரை வாடகையை ரூ.8ஆயிரத்திலிருந்து ரூ.12ஆயிரமாகவும், கடை வாடகையை ரூ.12ஆயிரத்திலிருந்து ரூ.22ஆயிரமாகவும் 200 மடங்குவரை உயர்த்தியுள்ளனர். கிராமங்களிலிருந்து வரும் வியாபாரிகள் தினமும் வாடகைக்கே ரூ.800, ரூ.1000 செலுத்தினால் அவர்களால் எப்படி தொழில் செய்ய முடியும்? இந்த வாடகையை கட்டவில்லை என்றால் அனைத்து கடைளுக்கும் சீல் வைப்போம் என அதிகாரிகள் கூறுகின்றனர். எந்தவிதத்தில் இது நியாயம்?
எனவே வாடகையை குறைக்க தமிழக அரசின் கவனத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வியாபாரிகளிடம், நகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் பேச்சுவார்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை வியாபாரிகள் விலக்கி கொண்டனர்.
பூ வியாபாரிகள் போராட்டத்தினால் திருவண்ணாமலை நகரின் முக்கிய வீதியான தேரடித் தெருவில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வீடியோவை காண…
https://www.facebook.com/100010512168519/videos/3347462028849331/