தென்னக அளவிலான உடல் கட்டழகு, உடல் கட்டமைப்பு போட்டியில் முதன்முறையாக திருவண்ணாமலை பெண்கள் சாதனை படைத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 36வது தென்னக உடல் கட்டழகு, உடல் கட்டமைப்பு போட்டிகள் நடைபெற்றன. இதில் திருவண்ணாமலை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களிலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். பெண்கள் பிரிவு போட்டியில் 8 பேர் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்ட மகாலட்சுமி(வயது 27), ராஜலட்சுமி(30) ஆகியோர் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். மகாலட்சுமி 2வது இடமும், ராஜலட்சுமி 3வது இடமும் பிடித்தனர். திருவண்ணாமலை நகரைச் சேர்ந்த மகாலட்சுமியும், ராஜலட்சுமியும் ராமலிங்கனார் தெருவில் உள்ள வைத்தி யுனிசெக்ஸ் பிட்னஸ் ஸ்டுடியோவில் பயிற்சி பெற்றவர்கள்.
பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு விழா வைத்தி யுனிசெக்ஸ் பிட்னஸ் மையத்தில் நடைபெற்றது. அம்மையத்தின் உரிமையாளர் டி.வைத்தீஸ்வரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகரமன்ற துணைத் தலைவர் ராஜாங்கம் கலந்து கொண்டு மகாலட்சுமிக்கும், ராஜலட்சுமிக்கும் தலா ரூ.10 ஆயிரத்தை பரிசாக வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் கண்ணதாசன், பயிற்சியாளர் எம்.அம்பிகா மற்றும் பயிற்சியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஆண்களுக்கு நிகராக உடற்பயிற்சியை மேற்கொண்டு பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்த மகாலட்சுமிக்கும், ராஜலட்சுமிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இது சம்மந்தமாக 2வது இடம் பெற்ற மகாலட்சுமி கூறுகையில், போலீசில் சேர்வதற்காக வைத்தி பிட்னஸ் சென்டரில் பயிற்சி பெற்றேன். 1வருடமாக ஜிம்மில் பயற்சி எடுத்து வருகிறேன். ஆம்பூரில் நடந்த தென்னக பாடி பில்டர் போட்டியில் பங்கேற்க எனக்கு கூடுதல் பயிற்சிகளை பயிற்சியாளர் வைத்தீஸ்வரன் அளித்தார். இதன் காரணமாகவே 2வது இடத்திற்கான பதக்கத்தை பெற முடிந்தது என்றார்.
3வது இடம் பெற்ற குறித்து ராஜலட்சுமி கூறுகையில் எனது கணவர் ஒன்றரை வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் குழந்தையுடன் சொந்த ஊரான கலசப்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வந்து விட்டேன். இங்கு வைத்தி பிட்னஸ் சென்டரில் வரவேற்பாளராக பணிக்கு சேர்ந்தேன். ஜிம்மில் பயிற்சி பெற்றவர்களை பார்த்து எனக்கும் ஆசை வந்தது. ஓய்வு நேரத்தில் பயிற்சிகளை செய்து பார்த்தேன். அந்த நேரத்தில்தான் ஆம்பூரில் நடைபெற்ற தென்னக பாடி பில்டர் போட்டி பற்றி தெரிய வந்தது. இதில் கலந்து கொள்வதற்காக 15 நாட்கள் கடுமையாக பயிற்சிகளை எனக்கு பயிற்சியாளர் வைத்தீஸ்வரன் அளித்தார். இதன் காரணமாக தென்னக அளவில் 3 இடத்தை பிடிக்க முடிந்தது என்றார்.
திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவில் செயல்பட்டு வரும் வைத்தி யுனிசெக்ஸ் பிட்னஸ் ஸ்டுடியோவில் உடற்பயிற்சி, குத்துச்சண்டை, பாடி பில்டிங், யோகா, பெண்களுக்கான நடனம் பயிற்சி, தடகள பயிற்சி போன்றவை கற்றுத் தரப்படுகிறது. ஏழை எளியோருக்கு இலவசமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.