பருவதமலை மீது ட்ரோன் கேமராவை பறக்க விட்டு பாதை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி தென்மகாதேவமங்கலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 4 ஆயிரத்து 560 அடி உயர பருவதமலை அமைந்துள்ளது. இங்கு மல்லிகார்ஜீனர் என்ற பெயருடன் சிவன் அருள்பாலிக்கிறார்.
அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து பறந்து சென்றபோது கீழே விழுந்த ஒரு பகுதியே பருவதமலை என்றும் பார்வதி தேவி ஈசனின் உடலில் இடபாகம் வேண்டி திருவண்ணாமலை நோக்கி வந்த போது இம் மலையின் அடிவாரத்தில் பச்சையம்மனாக தவமிருந்து இறைவனை வணங்கியதால் பர்வதமலை என்றும் அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கயிலாயத்தில் இருந்து சிவன் திருவண்ணாமலையில் இறங்கும் போது முதல் அடியை பர்வத மலையில் வைக்க பர்வதமலை சிவனைத் தாங்காது கீழே இறங்கி விட்டதாகவும், அவர் அடுத்த அடியை திருவண்ணாமலையில் வைத்ததாகவும் புராணத் தகவல்களாக சொல்லப்படுகிறது.
பருவதமலையில் சித்தர்கள் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. வடநாட்டில் எப்படி அபிஷேகம் அவரவரே செய்வதுபோல் இங்கும் இறைவனுக்கு பக்தர்களே அபிஷேகம் செய்யலாம்.
மலை உச்சயில் அமைந்துள்ள கோயிலில் 3 பிரகாரங்கள் உள்ளன. முதலில் விநாயகர், வள்ளிதெய்வானை சமேத முருகர், வீரபத்திரர், காளி ஆகியோரை தரிசிக்கலாம். இரண்டாவதாக ஸ்ரீ மல்லிகார்ஜுனரையும் அடுத்து ஜோதி ஒளி கன்னத்தில் பளீச்சிடும் பிரம்மராம்பிகை தாயாரையும் வணங்கலாம்.
அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் போது அந்த பொருள் ஒரு பக்கம் வழிந்து ஓடியும் ஒரு பக்கம் தேங்குவதையும் பார்க்கும் போது அர்த்தநாரிஸ்வரர் காட்சியளிப்பது போல் இருப்பதாக பக்தர்கள் பரவசத்துடன் தெரிவிக்கின்றனர்.
தங்களது பிரச்சனைகள் தீர பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், கார்த்திகை தீப நாட்களில் ஏராளமான பக்தர்கள் பருவதமலை மீது ஏறி சிவபெருமானை வணங்கி விட்டு செல்கின்றனர். தென்னிந்தியாவில் புகழ் பெற்ற மலைக்கோயில்களில் ஒன்றான பருவதமலைக்கு பல மாநிலங்களிலிருந்தும் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வருகின்றனர். 26 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலையை வலம் வருவதும் பிரபலமாகி வருகிறது.
4 ஆயிரத்து 560 அடி உயரம் ஏறிச் சென்று தரிசனம் செய்வது கடினமாக உள்ளதால் பக்தர்கள் சுலபமாக செல்வதற்கு புதிய மாற்று பாதை அமைப்பது சாத்தியமா? என தனியார் கட்டட ஆலோசனை நிறுவன அதிகாரிகளுடன் சென்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
புதிய பாதைக்கான வழித்தடத்தை கண்டு பிடிக்கவும், குறிப்பாக 700 அடிக்கு தூரத்திற்கு உள்ள செங்குத்தான கடப்பாரை படி, ஏணிப்படி, ஆகாயப்படி ஆகியவற்றுக்கு மாற்றாக பாதை அமைக்க முடியுமா? என்பது குறித்தும் நேற்று டிரோன் கேமராவை பருவதலை மீது பறக்க விட்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பருவதமலையில் மலைப்பாதை அமைப்பதற்கான ஆய்வை தொடங்கியுள்ளோம். மலை முழுவதையும் ஆய்வு செய்து அதில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து திட்டம் தயாரித்து அரசுக்கு அறிக்கையாக அளிப்போம் என்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் பக்தர்கள் இளைப்பாறும் கூடம், வாகனம் நிறுத்தும் இடம், குடிநீர், கழிவறை வசதிகள் போன்றவை செய்து தரப்படும் என கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்தி…