தனது நிலத்திற்கு சென்ற அண்ணாமலையாருக்கு பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் வட்டம் தனக்கோட்டிபுரம் கிராமத்தில் அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமாக 147 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு குத்தகைதாரர்கள் மூலம் நெற்பயிர்களே பிரதானமாக விளைவிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அண்ணாமலையார் கோயிலில் தினமும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் சராசரியாக 2 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தனக்கோட்டிபுரத்தில் அண்ணாமலையார் கோயில் நிலத்தில் விளையும் நெற்பயிரிலிருந்து வரும் அரிசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வைக்கோல், அண்ணாமலையார் கோயில் கோசாலையில் உள்ள மாடுகளுக்கு வழங்கப்படுகிறது.
இப்படி மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் உணவு அளித்து வரும் தனக்கோட்டிபுரத்தில் உள்ள தனது நிலத்திற்கு அண்ணாமலையார் செல்லும் நிகழ்வை ஏற்கனவே அண்ணாமலையார் கோயில் இணை ஆணையாளராக இருந்த ஜெயராமன் ஏற்படுத்தினார். அது முதல் வருடத்திற்கு ஒரு முறை தனக்கோட்டிபுரத்திற்கு அண்ணாமலையார் சென்று வருகிறார்.
இன்று கலசப்பாக்கத்தில் ரதசப்தமியை யொட்டி நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவிற்கு செல்லும் வழியில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் தனக்கோட்டிபுரத்தில் உள்ள தனது நிலத்திற்கு சென்றார். அண்ணாமலையார் வருகையையொட்டி தனக்கோட்டிபுரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வீடுகள் தோறும் மாவிலை தோரணம் கட்டப்பட்டு கோலமிட்டு அண்ணாமலையாருக்கு பூஜைகள் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து தனது நிலத்திற்கு சென்ற அண்ணாமலையாருக்கு அங்கு விளைந்த நெற்கதிர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மாலையை அணிவித்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அப்போது கூடியிருந்த கிராம மக்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா” என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் முன்னிலையில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
வழக்கமாக குலதெய்வத்திற்கும், அம்மனுக்கும் பொங்கல் வைப்போம். முத்தாய்ப்பாக அண்ணாமலையாருக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தது மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளித்ததாக பெண்கள் தெரிவித்தனர்.
வீடியோவை காண…
https://www.facebook.com/100010512168519/videos/3478029905765883/
அதன்பிறகு குதிரைகள் பூட்டிய ரதத்தில் வடக்கு நோக்கித் சூரியன் திரும்பும் நாளான ரதசப்தமியை யொட்டி கலசப்பாக்கம் செய்யாற்றில் நடைபெற்ற தீர்த்தவாரியில் அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலையம்மன், கலசப்பாக்கத்தில் வீற்றிருக்கும் திருமாமுடீஸ்வர் உடனாகிய திரிபுரசுந்தரி அம்பாளுடன் பங்கேற்றார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.