திருவண்ணாமலை அதிமுக பிரமுகர் உள்பட 8 பேருக்கு கொலை வழக்கில் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

திருவண்ணாமலை செங்கம் ரோடு ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா(வயது 55) 2-7-2012 அன்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது சம்மந்தமாக அவரது மனைவி மினி என்கிற எலியம்மா ஜோசப் திருவண்ணாமலை நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெங்கடேசன் உள்பட 10 பேரை கைது செய்து திருவண்ணாமலை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
திருவண்ணாமலை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் ராஜ்மோகன் சந்திராவின் மனைவி, தனது கணவர் கொலை செய்யப்பட்டது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கொலை வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்குமாறு திருவண்ணாமலை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கில் திருவண்ணாமலை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கில் சம்மந்தப்பட்ட செல்வம், வீராசாமி ஆகியோர் இறந்து விட்டதால் வெங்கடேசன், மீனாட்சி, முருகன், சந்திரசேகர், அய்யப்பன், விஜயராஜ், சடையன், சுப்பிரமணி ஆகிய 8 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி (பொறுப்பு) இருசன்பூங்குழலி தீர்ப்பு கூறினார்.