திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இசை நிகழ்ச்சியில் 4 வயது சிறுவன் கயிலாய வாத்தியம் வாசித்து பக்தர்களை வியப்பில் ஆழ்த்தினான். 108 முத்திரைகளை காட்டி சிவதாண்டவம் ஆடி சென்னையைச் சேர்ந்த பெண்கள் பக்தர்களை பரவசப்படுத்தினர்.
செருக்கை அடக்கிய சிவன்
திருமாலுக்கும், பிரம்மனுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டியால் போர் மூண்டு அழிவு பல ஏற்பட்டன. அவர்களது செருக்கை அடக்க சிவபிரான், மேலே ஏழுலகம், கீழே ஏழுலகங்களையும் கடந்து அப்பாற்பட்ட ஜோதித்தூணாக அவர்களுக்கிடையே தோன்றியருளினார்.
இருவரின் செருக்கு நீங்கிக் கைகூப்பி வணங்கி நின்றபோது, அந்தச் சோதித்தூண் வெடித்தது. அதிலிருந்து சிவபெருமான் லிங்கோற்பவ மூர்த்தியாய் தமக்கென உருவத் திருமேனியோடு தோன்றினார். அந்த நாள்தான் சிவராத்தியாகும். இதனால் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை அண்ணாமலையாருக்கு நான்கு கால பூஜை நடைபெற்றது.
சாபம் பெற்ற தாழம்பூ
அண்ணாமலையார் சன்னதி பின்புறம் உள்ள லிங்கோற்பவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தனது அடிமுடியை கண்டதாக பொய் சாட்சி சொன்ன தாழம்பூவை, எந்த பூஜையிலும் இடம் பெறாமல் போவாய் என இறைவன் சபித்தார். பிறகு தாழம்பூ மனம் வருந்தவே சிவராத்திரி அன்று உருவத் திருமேனிக்கு நடைபெறும் பூஜையில் பங்கு பெறும் வரத்தை தாழம்பூவுக்கு அளித்தார். இதனால் நேற்று இரவு நடைபெற்ற பூஜையில் லிங்கோற்பவர் மீது தாழம்பூ வைத்து பூஜை நடந்தது.
சிறப்பு கலை நிகழ்ச்சி
இந்த ஆண்டு மகா சிவராத்திரியை யொட்டி முதல்முறையாக திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் ஈசான்ய மைதானத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோவில் ஆஸ்தான நாதஸ்வர கலைஞர்களின் மங்கள இசையுடன் தொடங்கிய கலை நிகழ்ச்சி இன்று காலை 6 மணி வரை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், குத்து விளக்கேற்றி கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் அறநிலையத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
4 வயது சிறுவன் அசத்தல்
கைலாய வாத்தியம், சிவதாண்டவம், பரதநாட்டியம் சாமியாட்டம் உள்பட பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் விடிய, விடிய நடைபெற்றது. தேசிய இந்து திருக்கோயில்கள் பவுண்டேஷன் சார்பில் சங்கு, நெடுந்தாரை, திருச்சின்னம், குட்டை தாரை, எக்காளம் உள்பட பல்வேறு கருவிகளை கொண்டு சிவனடியார்கள் 1 மணி நேரம் கயிலாய வாத்தியத்தை இசைத்தனர்.
இதில் சிறுவன் ஒருவன், தன்னை விட உயரமான குட்டை தாரை என்ற இசைக்கருவியை தூக்கி வாசித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இரவு நேரமாகியும் தூங்காமலும், சோர்வடையாமலும் அடிக்கடி அந்த சிறுவன் தாரையை உயரே தூக்கி வாசித்ததை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து அந்த சிறுவனை பாராட்டினர்.
அந்த சிறுவனின் பெயர் சிவஹர்ஷித். 4 வயது ஆகிறது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, பெரம்பலக்குடியைச் சேர்ந்த பிரகாஷ்-கலைநிலவு தம்பதியினரின் ஒரே மகன். சிவனடியாரான பிரகாஷ் உடன் சென்று வாத்தியங்களை வாசிக்க கற்றுக் கொண்ட சிவஹர்ஷித் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் சார்பில் நடைபெற்ற சிவராத்திரி கலைநிகழ்ச்சியில்தான் முதன்முதலில் மேடை ஏறி வாசித்ததாக அவனது பெற்றோர்கள் தெரிவித்தனர்.
சிவதாண்டவ நடனம்
இதே போல் சென்னையைச் சேர்ந்த ஜெகதாலயா குழுவைச் சேர்ந்த வைஷ்ணவி சுகுமார், கிரி தர்ஷினி, பிரார்த்தனா, திவ்யா ஆகியோர் 108 முத்திரைகளை கொண்ட சிவதாண்டவ நடனத்தை ஆடினர்.
இதைப்பார்த்த பக்தர்கள் சிலர் உணர்ச்சி வசப்பட்டு மேடையின் கீழ் ஆடினர். பக்தர்களை பரவசப்படுத்திய சிவதாண்டவ நடனத்தை ஆடிய ஜெகதாலயா குழுவினருக்கு மாவட்ட ஆட்சியரும், பொதுமக்களும் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.
வீடியோவை காண…