தாலுகா ஆபீசிலிருந்து வேட்டி- சேலைகளை கடத்திச் சென்ற ஆட்டோவை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இதையொட்டி இரவு காவலாளி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலையில் இன்று காலை மூட்டைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவை ரோந்து போலீசார் மடக்கி விசாரித்தனர். அப்போது அந்த மூட்டைகளில் இருந்தது பொங்கல் பண்டிக்கையை யொட்டி பொதுமக்களுக்கு அரசு சார்பில் வழங்க வேண்டிய வேட்டி-சேலை என்பதும், திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்திலிருந்து அவை கடத்தி வரப்பட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து வேட்டி-சேலை அடங்கிய மூட்டைகளோடு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து வேட்டி-சேலையை கடத்திய வடஆண்டாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தாலுகா அலுவலக இரவு காவலாளி துவாரகேசவன்(வயது 28), ஆட்டோ உரிமையாளரும், டிரைவருமான பரசுராமன்(30) ஆகிய 2 பேரை பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இலவச வேட்டி-சேலையை விற்பனை செய்யும் நோக்கில் வடஆண்டாப்பட்டில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது.
தகவல் கிடைத்ததும் தாசில்தார் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் கிழக்கு காவல் நிலையத்திற்கு சென்று இது சம்மந்தமாக விசாரித்தனர். பிறகு புகார் ஏதும் கொடுக்காமல் திரும்பினர்.
வேட்டி-சேலை ஆட்டோவில் கடத்தப்பட்ட தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் திருவண்ணாமலை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ரமேஷ் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
இந்த வருட பொங்கல் பண்டிகையை யொட்டி பொது விநியோக திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக வேலூர் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திடமிருந்து டிசம்பர் 28ந் தேதி முதல் ஜனவரி 4ந் தேதி வரை 54 ஆயிரம் வேட்டியும், 64 ஆயிரம் சேலையும் வரப்பெற்றது.
இதில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 51 ஆயிரத்து 500 வேட்டியும், 51 ஆயிரத்து 500 சேலையும் அனுப்பி வைக்கப்பட்டது. மீதம் உள்ள 2ஆயிரத்து 500 வேட்டியும், 12 ஆயிரத்து 500 சேலையும், ஜனவரி 27ந் தேதி வரப்பெற்ற 10 ஆயிரம் வேட்டியும், 16 ஆயிரம் சேலையும் வட்டாட்சியர் அலுவலக கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை ஆய்வு செய்த போது தலா 100 எண்ணிக்கை கொண்ட 7 மூட்டை வேட்டியும், 4 மூட்டை சேலையும் காணாமல் போய் விட்டது. எனவே இந்த மூட்டைகளை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரை வழக்குப்பதிவு செய்த போலீசார் இரவு காவலாளி துவாரகேசவன், ஆட்டோ உரிமையாளர் பரசுராமன் ஆகிய 2 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
வேலியே பயிரை மேய்ந்தது போல் காவல் காக்க வேண்டிய இரவு காவலாளியே பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய வேட்டி-சேலையை ஆட்டையை போட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.