திருவண்ணாமலை அருகே ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டு வந்த பஞ்சாயத்து ஆபீஸ் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
திருவண்ணாமலை அடுத்த கலசபாக்கம் தொகுதி சிங்காரவாடி கிராமத்தில் நீர் நிலை புறம்போக்கில் இருந்த பஞ்சாயத்து அலுவலகத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து வருவாய்துறையினர் இடித்து தள்ளினர்.
சிங்காரவாடி கிராமத்தில் ஏரி உள்ளது. இது சுமார் 42 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரி நீர் பிடிப்பு பகுதியை சுற்றி பல்வேறு அரசு கட்டிடங்கள், மற்றும் தனிநபர்களின் வீடுகள் அமைந்திருக்கின்றன.
இந்நிலையில் கடலாடி கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் சிங்காரவாடியில் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அக்கிரமிப்புகளைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சிங்காரவாடி கிராமத்தில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், மகளிர் சுய உதவி குழு அலுவலகம், இ சேவை மையம் மற்றும் சில அரசு கட்டிடங்கள், தனியார் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் என 14 கட்டிடங்கள் நீர்நிலை புறம்போக்கில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பஞ்சாயத்து அலுவலகமும் ரூ.23 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்டு வந்தது.
கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கலசப்பாக்கம் தாசில்தார் தட்சணாமூர்த்தி தலைமையில் வருவாயத்துறை அலுவலர்கள் முன்னிலையில் இன்று பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. மேலும் 3 வீடுகளும் இடிக்கப்பட்டன.
புதிய பஞ்சாயத்து அலுவலகம் கட்ட ரூ.23 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அதில் ஏறக்குறைய ரூ.14 லட்சத்திற்கு மேல் செலவிடப்பட்ட நிலையில் நீர்நிலை புறம்போக்கில் பஞ்சாயத்து அலுவலகம் கட்ட கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பொறியாளர்கள் எப்படி அனுமதித்தார்கள்? என்பது கேள்வி குறியாக உள்ளது. அனுமதி அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததும் விழித்துக் கொண்ட அதிகாரிகள் கட்டுமான பணியை நிறுத்தும்படி சொன்னதாகவும், ஆனால் ஊராட்சி மன்றத் தலைவர் தைரியமாக பஞ்சாயத்து அலுவலகத்தை கட்டி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்போது அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு விட்டதால் அதற்கான செலவினங்களுக்கு பி.டி.ஓ அலுவலகத்தில், அனுமதி அளிக்காமல் நிறுத்தி வைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ரேஷன் கடையில் பொருட்கள் இருப்பதாலும், அங்கன்வாடியில் குழந்தைகள் படிப்பதாலும் மாற்று ஏற்பாடு செய்து விட்டு அந்த கட்டிடங்களும், மற்ற கட்டிடங்களும் இடிக்கப்படும் என தெரிகிறது.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதையொட்டி போளுர் டி.எஸ்.பி. குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஒரே கிராமத்தில் 14 கட்டிடங்கள் நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.