வீடு கட்டுவதற்கு தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர்மேன் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் தென்றல் நகரைச் சேர்ந்தவர் வரதன்(வயது 47). சென்னையில் ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி சுதா பெயரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மேலதிகான் பகுதியில் வீட்டுமனை வாங்கி இருந்தார்.
சொந்தமாக வீடு இல்லை என்பதால் இந்த பிளாட்டில் வீடு கட்டுவதற்காக வேலையில் வரதன் இறங்கினார். இதற்காக தற்காலிக இணைப்பு கேட்டு மின்சார வாரியத்தில் கடந்த 30-1-2023 இ சேவை மூலம் பதிவு செய்து அதற்குண்டான தொகை ரூ.586-யை ஆன்லைனில் செலுத்தி விட்டார்
இதையடுத்து கடந்த 10ந் தேதி வரதன் வீடு கட்ட உள்ள இடத்தில் மின்சார வாரிய ஊழியர்கள் தற்காலிக மின் மீட்டரை பொருத்தினர். அப்போது மின்சார வாரியத்தில் பணிபுரியும் போர்மேன் ரேணு என்பவர் மின் இணைப்பு தர லஞ்சமாக ரூ. 5 ஆயிரம் தர வேண்டும் என கேட்டாராம். அதற்கு வரதன், நானே ஹோட்டலில் சப்ளையராக பணிபுரிகிறேன், என்னால் அவ்வளவு தொகை முடியாது என்று சொன்னாராம். இதனால் ஆத்திரம் அடைந்த போர்மேன் ரேணு, ஓட்டலில் வேலை செய்கிற நீ எதற்கு வீடு கட்டுகிறாய்? என திட்டி விட்டு சென்று விட்டாராம்.
பின்னர் வரதனை தொடர்பு கொண்டு ரூ.5 ஆயிரம் கேட்டு வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து வரதன், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய பணத்தை போலீசார், வரதனிடம் கொடுத்து அனுப்பினார்கள். வேங்கிக்காலில் உள்ள உதவி மின் பொறியாளர் கிராமிய தெற்கு பிரிவு அலுவலகத்தில் இருந்த போர்மேன் ரேணுவிடம், அந்த பணத்தை வரதன் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி திருவேல்முருகன், இன்ஸ்பெக்டர் மைதிலி, போலீஸ்காரர்கள் செல்வராஜ், கோபிநாத், முருகன், சரவணன், கமலக்கண்ணன் ஆகியோர் ரேணுவை கையுங்களவுமாக பிடித்து கைது செய்தனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசின் இந்த அதிரடி நடவடிக்கை, மின்சார வாரிய அலுவலர்கள், ஊழியர்களிடையே கிலியை ஏற்படுத்தியுள்ளது.