திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பாதுகாப்பற்ற ஏடிஎம்களை மூட கலெக்டர் உத்தரவிட்டிருக்கிறார்.
திருவண்ணாமலையில் வெளிமாநில கொள்ளையர்கள் ஏடிஎம் மிஷினை உடைத்து ரூ.72 லட்சத்தை கொள்ளையடித்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள ஏடிஎம் மிஷின்களில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி போலீசார் வங்கிகளை அறிவுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்களுக்கான ஏடிஎம் மையங்களில் பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில்; இன்று மாலை நடைபெற்றது.
வங்கியாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பேசியதாவது,
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, தனியார் மற்றும் கூட்டுறவு துறை உட்பட 389 பணம் எடுக்கும் தானியங்கி இயந்திரம் செயல்பட்டு வருகின்றது. அனைத்து வங்கி மேலாளர்களும் ஏடிஎம் மைய பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். கண்காணிப்பு கேமரா, தீயணைப்பு பாதுகாப்பு சிலிண்டர் கட்டாயமாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் ஒவ்வொரு ஏடிஎம்-லும் இரவு காவலர்களை கட்டாயமாக பணியில் ஈடுபடத்திட வேண்டும். நியமனம் செய்திடும் காவலர்களின் பணிவருகையினை வங்கி மேலாளர்கள் உறுதி செய்திட வேண்டும், அதே போல் ஏடிஎம்- களில் மின்விளக்குகள், சிசிடிவி கேமிராக்கள் மற்றும் அபாய எச்சரிக்கை மணி ஆகியவற்றினை அவ்வப்போது வங்கியாளர்கள் சோதனை செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் ரிசர்வ் பேங்க் ஆப் இண்டியா அறிவுறுத்தலின்படி பாதுகாப்பு இல்லை என்று கருதப்படும் ஏடிஎம் மையங்களை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பூட்டி வைக்கும்படி வங்கியாளர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் தாட்கோ கடன், மகளிர் குழு கடன், பட்டுப்புழு வளர்ப்பு கடன், கைத்தறிக்கடன், வேளாண்மை விற்பனைத்துறை, வேளாண்மை துறை சார்பில் வழங்கப்படும் கிசான் அட்டை, மாவட்ட தொழில் மையத்தில் செயல்படும் திட்டங்கள் உள்ளிட்ட ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசால் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் மான்யத் திட்டங்கள் பயனாளிகளுக்கு விரைந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்கும்படி வங்கியாளர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சிலம்பரசன், வேளாண்மை துறை இணை இயக்குநர் அரக்குமார், திருவண்ணாமலை கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, தாட்கோ மேலாளர் ஏழுமலை, மாவட்ட தொழில் மைய மேலாளர் ரவி மற்றும் வங்கி, அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.