மழை, வெயில் பாதிக்காத வண்ணம் திருவண்ணாமலையில் அண்ணாமலையார், அம்மன் தேர் போன்று மற்ற தேர்களுக்கும் ரூ.33 லட்சத்தில் தகடுகள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக் கூடியதாகும். இக்கோயிலில் ஓராண்டில் 12 மாதங்களும் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. இதில் வேறு எங்கும் காண இயலாத ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெறும் கார்த்திகை தீப தரிசன விழா ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் நடைபெற்று வருகிறது.
மலை மீது ஏற்றப்படும் மகாதீபத்தை தரிசிக்க சுமார் 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் கூடுவார்கள். அதே போல் கார்த்திகை தீபத் திருவிழா 7 வது நாள் தேரோட்டத்தை காண சுமார் 5 லட்சம் பேர் வருகை தருவார்கள்.
பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும். 200 டன் எடை கொண்ட பெரிய தேரான அண்ணாமலையார் தேர் நிலையை வந்தடைந்ததும், இரவில் மின் விளக்கு அலங்காரத்துடன் அம்மன் தேர் புறப்பட்டு செல்லும். இத் தேரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுப்பர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 3ந் தேதி தேரோட்டமும், 6ந் தேதி மகாதீப விழாவும் சிறப்பாக நடந்து முடிந்தது. இதையடுத்து அண்ணாமலையார் தேருக்கும், அம்மன் தேருக்கும் மழை, வெயிலில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மேற்கூரையுடன், முழுவதுமாக ஷீட்கள் பொருத்தப்பட்டன.
ஆனால் பல லட்சம் ரூபாய் செலவில் புதியதாக பீடம் அமைக்கப்பட்ட முருகர் தேர் மழையிலும், பனியிலும் நனைந்ததை பார்த்து பக்தர்கள் வேதனையடைந்தனர். தற்போது வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டதால் அண்ணாமலையார், அம்மன் தேரை போன்று மற்ற தேர்களுக்கும் மழை, வெயில் பாதிக்காதவாறு புதியதாக மேற்கூரை அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் விநாயகர் தேருக்கு ரூ. 11 லட்சத்து 90 ஆயிரம் செலவிலும், முருகர் தேருக்கு ரூ.14 லட்சத்து 85 ஆயிரம் செலவிலும், சண்டிகேஸ்வரர் தேருக்கு ரூ. 7 லட்சத்து 15 ஆயிரம் செலவிலும் மேற்கூரையும், நான்கு புறமும் தகடுகள் பொருத்தும் பணியும் தொடங்கியுள்ளது. இதற்கு முன்னால் இந்த தேர்களுக்கும் சாதாரண தகடுகள் பொருத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெயிலிலும், மழையிலும் தேருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ட்ரான்ஸ்பரன்ட் சீட்டுடன் கூடிய தகடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.
அண்ணாமலையார், அம்மன் தேர் போன்று மற்ற தேர்களுக்கும் பாதுகாப்பாக தகடுகள் அமைக்கப்பட்டு வருவது பக்தர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.