Homeஆன்மீகம்முதன்முறையாக ஈசான்யத்தில் விடிய விடிய சிவராத்திரி விழா

முதன்முறையாக ஈசான்யத்தில் விடிய விடிய சிவராத்திரி விழா

திருவண்ணாமலை ஈசான்யத்தில் முதன்முறையாக அண்ணாமலையார் கோயில் சார்பில் சிவராத்திரி விழா நடத்தப்படுகிறது.

ஜோதித்தூணாக தோன்றினார்

திருமாலும், பிரம்மனும் பல காரணங்களை எடுத்துக்கூறி ‘நானே பெரியவன்’ என்று போரிட்டனர். அவர்கள் செய்த போரினால் உயிரினங்கள் எல்லாம் துன்பமடைந்து, பல அழிவுகள் ஏற்பட்டன. அப்போது எல்லாம் வல்ல பரம்பொருளாகிய சிவபெருமான், ‘நான்’ எனும் செருக்கு அடங்கனாலன்றி எவ்வளவு சிறப்பு உடையவர்களாயினும் சிவ பரம்பொருளைக் காண முடியாது என்ற உண்மையை உணர்த்த வேண்டுமெனத் திருவுளம் கொண்டார்.

அவ்வாறே அனைத்து உயிர்க்கும் அன்னையும் அந்தனுமாக விளங்கும் சிவபிரான், மேலே ஏழுலகம், கீழே ஏழுலகங்களையும் கடந்து அப்பாற்பட்ட ஜோதித்தூணாக அவர்களுக்கிடையே தோன்றியருளினார்.

அப்போது பிரமனும், திருமாலும் திகைப்புற்றுப் போரினைக் கைவிட்டு நின்றார்கள். அந்த மாபெரும் சோதித்தூண் தோன்றிய இரவு நேரந்தான் சிவராத்திரியாகும்.

முதன்முறையாக ஈசான்யத்தில் விடிய விடிய சிவராத்திரி விழா

லிங்கோற்பவ மூர்த்தி

இருவரின் செருக்கு நீங்கிக் கைகூப்பி வணங்கி நின்றபோது, அந்தச் சோதித்தூண் வெடித்தது. அதிலிருந்து சிவபெருமான் லிங்கோற்பவ மூர்த்தியாய் தமக்கென உருவத் திருமேனியோடு தோன்றினார்.

தமக்கென ஓர் உருவம் இல்லாத இறைவன், ஆன்மாக்களுக்கு அருள்பாலிக்க வேண்டி லிங்க வடிவமாக அந்தத் தூணிலிருந்து உருவங்கொண்டு வெளிப்பட்ட காலத்தை லிங்கோற்பவப் புண்ணிய காலம் என்று நூல்கள் கூறும். அவ்வாறு சிறப்பித்து பேசப்படும் லிங்கோற்பவ காலமானது மேலே குறிப்பிட்ட சிவராத்திரியின் கண் இரவு பதினான்கு நாழிகைக்கு மேற்பட்ட ஒரு முகூர்த்த நேரமாகும். அதாவது இரவு 11.36 மணிக்குமேல் 1.00 மணிவரை உள்ள காலமாகும்.

வில்வ கூடைகளோடு கிரிவலம்

இந்த ஆண்டு வரும் 18ம் தேதி சனிக்கிழமை மாசி மாத மகா சிவராத்திரியை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு காலை சிறப்பு பூஜைகள் நடக்கும். பக்தர்கள் வில்வ கூடைகளுடன் சிவநாமத்தை உச்சரித்து, கிரிவலம் வந்து, கூடைகளை கோயிலில் வழங்குவர். தொடர்ந்து, லட்சார்ச்சனை நடக்கும்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு, இரவு 7.30 மணிக்கு முதல்காலம், நள்ளிரவு 11.30 மணிக்கு 2ம் காலம், அதிகாலை 2.30 மணிக்கு 3ம் காலம், அதிகாலை 4.30 மணிக்கு 4ம் காலம் என நான்கு கால அபிஷேகம் அண்ணாமலையாருக்கு நடக்கும்.

முதன்முறையாக ஈசான்யத்தில் விடிய விடிய சிவராத்திரி விழா

தாழம்பூ வைத்து வழிபாடு

இதில், 2ம் கால அபிஷேகத்தில் சுவாமிக்கு தாழம்பூ வைத்து வழிபாடு நடக்கும். அதேபோல், கர்ப்பகிரகத்தின் பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பன்னிரு திருமுறை ஓதுதல் நடக்கும்.

இந்த ஆண்டு அண்ணாமலையார் கோயில் சார்பில் முதன்முறையாக ஈசான்யம் மைதானத்தில் மகா சிவராத்திரி விழா நடக்கிறது. 18ந் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் 19ந் தேதி காலை 6 வரை 12 மணி நேரம் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

கயிலாய வாத்தியம், சாமியாட்டம், ‘சிவனடியார்கள் பெரிதும் சிந்தை மகிழ்ந்தது மக்கள் தொண்டிலா? மகேசன் தொண்டிலா? ‘ என்ற தலைப்பில் பட்டிமன்றம், கார்த்திக் ராஜாவின் பக்தி இசை இடம் பெறுகிறது. 19ந் தேதி விடியற்காலை 3 மணி முதல் காலை 6 மணி வரை ஏர்டெல் சூப்பர் சிங்கர்ஸ்சின் இசை சங்கமத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

முதன்முறையாக ஈசான்யத்தில் விடிய விடிய சிவராத்திரி விழா

விசுவ இந்து பரிஷத் எதிர்ப்பு

அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அச்சடித்துள்ள சிவராத்திரி பத்திரிகையில் ஈசான்ய மைதானம் என்பது இல்லாமல் அண்ணா நுழைவு வாயில், கலைஞர் சிலை அருகே உள்ள நகராட்சி மைதானம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோயிலுக்கு வெளியே சிவராத்திரி விழாவை நடத்துவதற்கு விசுவ இந்து பரிஷத் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விழா நடைபெறும் இடம், கோயிலில் இருந்து 2 கிலோ மீட்டர் வெளியே உள்ளது. பாரம்பரியமிக்க மிக பழமையான மகா சிவராத்திரி விழா திருக்கோயிலை தவிர்த்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும், மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே தமிழக முதல்வர் தலையிட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயிலுக்குள் உள்ளேயே நடத்த உத்தரவிட வேண்டும் என விசுவ இந்து பரிஷத் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!