தைப்பூசத்தை முன்னிட்டு பெருமணத்தில் சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் விநோத திருவிழா நடைபெற்றது.
திருவண்ணாமலையிலிருந்து திருக்கோயிலூர் செல்லும் சாலையில் உள்ளது பெருமணம். கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமணம் ஆன்மீகத்திற்கு பெயர் போன ஊராகும். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க கூடாது என்ற முன்னோர் வாக்கை பின்பற்றி இந்த ஊரில் திரும்பும் திசையெல்லாம் கோயிலை கட்டியுள்ளனர்.
பெருமணத்தில் உள்ள கைலாசநாதர் கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு சொந்தமாக 40 ஏக்கர் நிலம் உள்ளது.
இது மட்டுமன்றி விநாயகர், முருகர், மாரியம்மன், சௌடேஸ்வரி, திரவுபதி, அய்யனாரப்பன், பெரியாண்டவர், காட்டேரி, பெரியயாயி, காத்தவராயன் உள்பட 16 சாமிகளுக்கு பெருமணத்தில் தனித்தனி கோயில்கள் அமைந்துள்ளன. சென்ற ஆண்டு நடைபெற்ற சௌடேஸ்வரி கோயில் கும்பாபிஷேகத்தின் போது கத்தி விளையாட்டு எனும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் தங்களது உடம்பில் கத்தியால் வெட்டிக் கொண்டு நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இந்நிலையில் பெருமணம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூச விழா விமர்சையாக நடத்தப்பட்டது. முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடந்தது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் முதுகில் அலகு குத்தி செக் இழுத்தும், ராட்டினத்தில் தொங்கியும், ஆணிகள் பதிக்கப்பட்ட காலணியில் ஏறி நின்றும் நேர்த்திக் கடனை செலுத்தினர். இதைப் பார்த்தும். டிராக்டர் ஒன்றை முதுகில் குத்தப்பட்ட அலகால் பக்தர் ஒருவர் இழுத்து வந்ததை பார்த்தும் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
பக்தர்கள் மார்பில் உரல் வைத்து அதில் மஞ்சள், அரிசி இடித்து மாவாக்கி அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்கள். செக்கில் ஆடப்பட்ட எண்ணெய்யை கொண்டு சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதே போல் கொதிக்கும எண்ணெய்யில் வடை சுடப்பட்டது. மாலையில் 30 தேர்களை பக்தர்கள் முதுகில் அலகு குத்தி இழுத்து வந்தனர்.
இதில் பொது தேர் எனப்படும் முதலாவதாக புறப்படும் விநாயகர் தேரை இழுத்துச் சென்றால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையால் பக்தர்கள் அந்த தேரை இழுக்க போட்டி போடுவார்கள். இதனால் இந்த தேர் பொது ஏலத்தில் விடப்படும். இந்த வருடம் தேர் இழுக்கும் உரிமை ரூ.35ஆயிரத்திற்கு ஏலம் போனது.
தைப்பூச விழா 2வது நாளான இன்று சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் பூசாரிகள் தனபால், தங்கமணி ஆகியோர் குறைகள் தீர வேண்டிக் கொள்பவர்கள் மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்களை ஆணிகள் பதித்த காலணி மீது நிற்க வைத்து சாட்டையால் அடித்தனர். இந்த விநோத விழாவை காண பெருமணம் மட்டுமன்றி சுற்றுப்புற பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
2 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணியரை வழிபட்டு சென்றனர்.
தொடர்புடைய செய்தி…