திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளுரில் 4 ஏ.டி.எம் மிஷினை உடைத்து ரூ. 70 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திருவண்ணாமலையில் கேஸ் வெல்டிங் மிஷினை பயன்படுத்தி இந்த கொள்ளை நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெரு, தேனிமலை, போளுர் ஆகிய இடங்களில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். இயந்திரத்திலும், கலசபாக்கத்தில் ஒன் இந்தியா என்ற ஏ.டி.எம்மிலும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஏ.டி.எம் இயந்திரத்திலும் ரூ.20 லட்சத்திற்கும் மேல் பணம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இரவு ரோந்து பணியில் போலீசார் இல்லாததை பயன்படுத்தி, 4 இடங்களிலும் உள்ள ஏ.டி.எம் இயந்திரங்களிலும் ஒரே பாணியில் கொள்ளையர்கள் பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர்.
மேலும் ஏடிஎம் இயந்திரம் உள்ள பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையடித்த நபர்களை கண்டுபிடிக்க எஸ்.பி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் ஆந்திர மாநிலம் வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் கொள்ளையர்களை பிடிக்க ஆந்திர மாநில போலீசாரின் உதவியை தனிப்படை போலீசார் நாடியிருக்கின்றனர்.
கொள்ளை நடைபெற்ற இடங்களை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் இன்று காலை நேரில் பார்வையிட்டார். திருவண்ணாமலையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
திருவண்ணாமலையில் இன்று விடியற்காலை 4 இடங்களில் ஏடிஎம் கொள்ளை நடந்துள்ளது. கேஸ் வெல்டிங் மிஷின் வைத்து இந்த கொள்ளை நடந்திருக்கிறது. இது சம்பந்தமான சில தடயங்கள் கிடைத்திருக்கிறது. கொள்ளையர்களை விரைவில் கண்டுபிடித்து விடுவோம்.
ஒரு கும்பலாக வந்து இந்த கொள்ளையை நடத்தி இருக்கின்றனர். வெளிமாநிலத்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கின்றனர். அவர்களை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களை அவர்கள் நோட்டமிட்டுதான் கொள்ளையை நடத்தியிருக்கின்றனர்.
முன்பெல்லாம் ஏடிஎம் மிஷின்களில் வாட்ச்மேன் இருப்பார்கள். இப்போதெல்லாம் வாட்ச்மேன் இருப்பதில்லை. ஏடிஎம் மிஷினை பற்றி தெரிந்தர்கள் தான் இந்த கொள்ளையை நடத்தி இருக்க முடியும். இதேபோல் கேஸ் வெல்டிங் மிஷின் பற்றி தெரிந்துள்ள மெக்கானிக்கும் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கிறோம்.
4 ஏடிஎம் மிஷினில் இருந்து ரூ. 70 லட்சம் திருடு போயிருக்கிறது. இரவு ரோந்து பணியில் சரிவர செயல்படாத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த வகையான கொள்ளை தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் முதல் முறையாக நடந்து இருக்கிறது. இதே போன்று மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா, புனே போன்ற பல மாநிலங்களில் இதே மாதிரியான கொள்ளை நடந்திருக்கிறது.
திருவண்ணாமலை நகரத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் சில தடயங்கள் பதிவாகி இருக்கிறது அதை கொண்டு விசாரணை துவக்கி உள்ளோம். இந்த மாதிரியான கொள்ளை சம்பவங்கள் தமிழ்நாட்டுக்கு இதுதான் முதல் முறை. போன வருடம் ஜூன் மாதத்தில் வடநாட்டில்தான் இந்த மாதிரி கொள்ளைகள் நடந்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆன்மீக நகரான திருவண்ணாமலையில் முதன்முறையாக உருவான கூலி படையை கொண்டு சென்ற மாதம் நடைபெற்ற கொலை சம்பவமும், தமிழ்நாட்டிலேயே இன்று திருவண்ணாமலையில் கேஸ் வெல்டிங் மிஷினால் ஏ.டி.எம். கொள்ளைகள் நடந்திருப்பதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.