திமுகவிற்கு ஓட்டு போடாதவர்களெல்லாம் சந்தோஷமாக உள்ளனர், ஓட்டு போட்ட அரசு ஊழியர்கள் நடுதெருவில் நிற்கின்றனர் என அரசு ஊழியர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
CPS திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் வழங்கவேண்டும், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு வழங்கும் பணியை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடத்திட வேண்டும்,
ஊதிய உச்சவரம்பின்றி அனைவருக்கும் ஒருமாத ஊதியம் போனஸ் வழங்க வேண்டும். A மற்றும் B பிரிவு ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டது போல் மிகை ஊதியம் வழங்கவேண்டும், அரசாணை 115-ன் மூலம் அரசு துறைகளில் நிரந்தர பணியிடங்களை ஒழித்துக்கட்டுதல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை 139, 152 ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்திட வேண்டும். அரசுத் துறைகளில் நாலரை லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
3வது கட்ட போராட்டமாக நேற்று மாவட்ட தலைநகர்களில் கோரிக்கை பேரணி நடத்தப்பட்டது.
திருவண்ணாமலையில் திருவள்ளுவர் சிலை முன்பிருந்து பேரணி புறப்பட்டு தாலுகா அலுவலகத்தை வந்தடைந்தது. பேரணியை மாநில துணைத் தலைவர் (சத்துணவு ஊழியர் சங்கம்) க.அண்ணாதுரை துவக்கி வைத்தார். தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொருளாளர் மு.பாஸ்கரன் சிறப்புரையாற்றினார்.
மாவட்டத் தலைவர் சு. பார்த்திபன், மாவட்டச் செயலாளர் க. பிரபு மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பி.கிருஷ்ணமூர்த்தி, கோ.ஸ்ரீதர், கோ. அண்ணாமலை, எஸ்.சையத் ஐலால், அ. சம்பத், மா. மணி, மா. மகாதேவன், கி. ராஜா, தெ.பி.புனிதா, எம்.சுதாகரன், எஸ்.நந்தினி, அ.மிருணாளினி உள்பட பலர் பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்களில் சிலர், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதிகளை அளித்து திமுக அரசு ஏமாற்றி விட்டது. ஈரோடு தேர்தலில் இது எதிரொலிக்கும். திமுகவிற்கு ஓட்டு போடாதவர்களெல்லாம் சந்தோஷமாக உள்ளனர், ஓட்டு போட்ட அரசு ஊழியர்கள் நடுதெருவில் நிற்கின்றனர் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி 28.03.2023 அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம், கோரிக்கைகளை நிறைவேற்றிடத் தவறும் பட்சத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது கோட்டை முற்றுகை ஆகிய போராட்டங்களை நடத்தப் போவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.