Homeசெய்திகள்ரூ.1000 கோடி எங்கே? தமிழக அரசுக்கு தனியார் பள்ளிகள் கேள்வி

ரூ.1000 கோடி எங்கே? தமிழக அரசுக்கு தனியார் பள்ளிகள் கேள்வி

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு ரூ.1000 கோடியை தராமல் உள்ளதாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கத்தின் சார்பில் மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் உள்ள தனியார் பள்ளி கட்டிடங்களுக்கான சொத்துவரி கட்ட கால அவகாசம் வழங்கிட கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் கே.கஜேந்திரன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் சிறப்புரையாற்றினார்.

அரசு பள்ளிகளுக்கும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் சொத்துவரி இல்லாத நிலையில் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் 150 சதவிதம் உயர்த்தப்பட்ட சொத்துவரியை உடனடியாக கட்ட வற்புறுத்துவது, பள்ளிகளை ஜப்தி செய்வது, சீல் வைப்பது, குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டிப்பது, கழிவுநீர் கால்வாய்களை அடைப்பது, மின்இணைப்பை துண்டிப்பது, பள்ளி நிர்வாகிகளை தரக்குறைவாக பேசுவது, சுகாதார சான்று தர மறுப்பது போன்ற சட்டத்திற்கு விரோதமான காரியங்களை தொடர்ந்து செய்து வரும் நகராட்சி ஊழியர்கள் மற்றும் உயரதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரூ.1000 கோடி எங்கே? தமிழக அரசுக்கு தனியார் பள்ளிகள் கேள்வி

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் பேசியதாவது,

இதற்கு முன் இருந்த ஆட்சிகள், அறக்கட்டளை மூலம் நடைபெற்ற கல்வி ஸ்தாபனங்களுக்கு சொத்து வரியிலிருந்து விலக்களித்திருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் கிராமபுற பள்ளிகள் உள்பட எல்லா பள்ளிகளிலும் சொத்து வரி, மின்கட்டணத்தை உயர்த்தி விட்டார்.

பொருளாதார சூழ்நிலை சரியில்லாத நிலையிலும், கொரோனா காலத்தில் நிறைய பிள்ளைகள் பள்ளிக்கு வராத நிலையிலும், அப்படி வந்தாலும் பணம் கட்டாத நிலையில் தனியார் பள்ளி நிர்வாகிகள் தத்தளித்து வருகின்றனர்.

அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு சொத்து வரி இல்லாத போது தனியார் பள்ளிகளுக்கு மட்டும் சொத்து வரியை விதித்து அரசு ஒரு கண்ணில் சுண்ணாம்பும், ஒரு கண்ணில் வெண்ணெய்யை தடவியிருக்கிறது. ஆர்டிஇயின் (இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம்) கீழ் தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு கடந்த 2 வருடங்களாக ரூ.1000 கோடியை தராமல் உள்ளது. சொத்துவரிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் சொத்து வரியை கட்டச் சொல்லி காலஅவகாசம் தராமல் சீல் வைக்கின்றனர். உச்சநீதிமன்ற வழக்கு தீர்ப்பு வரும்வரை தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் சொத்துவரி வசூலிப்பதை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் தனியார் பள்ளி உரிமையாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை மாவட்ட கே.கிருஷ்ணகஜேந்திரன் நன்றி கூறினார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!