பொதுப்பணித்துறை காண்டராக்டரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கும், பெண் அதிகாரிக்கும் 1 வருட கடுங்காவல் தண்டனை விதித்து நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு,
ஆம்பூரைச் சேர்ந்த சி.நடராஜன் 25 வருடங்களாக பொதுப்பணித்துறையில் காண்டராக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் 2008-2009 ஆம் ஆண்டு 2 கோடியே 8 லட்சத்து 64 ஆயிரத்து 512 ரூபாய் மதிப்பில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்கா பூதேரி புல்லவாகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி, செய்யாறு அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, பிரசவ பிரிவு, பிரேத பரிசோதனை மற்றும் இதர கட்டிடங்கள் கட்டுவதற்கான டெண்டரை எடுத்திருந்தார்.
இதற்காக ரூ.8லட்சத்து 47ஆயிரத்து 500 வைப்புத் தொகையாகவும், காப்புத் தொகையாகவும் பொதுப்பணித்துறையிடம் செலுத்தியிருந்தார். கடந்த 2010ம ஆண்டு மேற்கண்ட வேலைகளை முடித்து விட்டு வைப்பு மற்றும் காப்புத் தொகையாக செலுத்தியிருந்த ரூ.8லட்சத்து 47ஆயிரத்து 500ஐ திரும்ப பெற தடையில்லா சான்றிதழுக்கு விண்ணப்பித்திருந்தார்.
இந்த தடையில்லா சான்று பெற செய்யாறு பொதுப்பணித்துறை செயற்பொறியாளார் மாரியப்பா, ரூ.50 ஆயிரமும், பெயர் எழுதாமல் ரூ.1 லட்சத்திற்கான காசோலை தர வேண்டும் என கூறினாராம். அதே போல் தொழில் நுட்ப உதவியாளார் தமிழ்செல்வியும் ரூ.50ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டாராம்.
இது குறித்து நடராஜன், 25.1.2012-ம் தேதி வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் பெறும் போது மாரியப்பாவையும், தமிழ்செல்வியையும் கையுங்களவுமாக பிடித்து கைது செய்தனர். இதே போல் ஒப்பந்ததாரர் குணசேகரன் என்பவரும் சிக்கினார்.
இது சம்மந்தமான வழக்கு திருவண்ணாமலை முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாரியப்பா, உதவியாளர் தமிழ்செல்வி ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 2 பேருக்கும் தலா 1 வருட கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரமும் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.