திருவண்ணாமலை அம்மணி அம்மன் மடத்தின் மீது ஏறி அமைச்சருக்கு எதிராக கருத்துக்களை கூறிய பாஜக பிரமுகர் சங்கர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சங்கர் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வடக்கு கோபுரம் கட்டப்படாமல் பாதியில் நின்ற போது அதை நன்கொடை பெற்று கட்டி முடித்தவர் பெண் சித்தர் அம்மணி அம்மாள். வடக்கு கோபுரம் எனப்படும் அம்மணி அம்மன் கோபுரத்திற்கு எதிரில் அவர் தங்கி ஆன்மீக சேவை செய்து வந்த மடத்தின் ஆக்கிரமிப்புகள் சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டன. பாஜக பிரமுகர் டி.எஸ்.சங்கரின் மாடி வீடும் இடித்து தள்ளப்பட்டது.
400 வருடங்கள் பழமையான மடம்
அப்போது 400 வருடங்கள் பழமையான மடமும் சேர்த்து இடிக்கப்பட்டது பக்தர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. மடம் இடிப்பதை கேள்விப்பட்டு இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் அங்கு சென்று ஜேசிபியை சிறை பிடித்து போராட்டம் நடத்தியதன் காரணமாக மடம் இடிப்பது நிறுத்தப்பட்டது. ஆனாலும் பாதிக்கு மேற்பட்ட பகுதிகள் இடித்து தள்ளப்பட்டன.
முதல் நாள் ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியிருந்த விசுவ இந்து பரிஷத், மறுநாள் மடம் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியது.
இந்து முன்னணி
மடம் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அந்த மடத்திற்கு அருகில் இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கோட்டத் தலைவர் கோ.மகேஷ், பெண் சித்தர் அம்மணி அம்மாளின் மடத்தை இடித்தவர்கள் நாசமாக போவார்கள், குடும்பம் விளங்காமல் போகும் என சாபம் விட்டார். பிறகு இடிக்கப்பட்ட இடத்திலிருந்து மண்ணை வாரி இறைத்தும் இந்து முன்னணி நிர்வாகிகள் சாபம் விட்டனர்.
தீர்ப்புக்கு எதிராக
இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நேரத்தில், பாஜக பிரமுகர் டி.எஸ்.சங்கர், இடிக்கப்படாமல் இருந்த மடத்தின் ஒரு பகுதியின் மீது ஏறி மடம் இடிக்கப்பட்டதற்கு எதிராக போராட்டம் நடத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம், ஒரு பழமையான, வரலாற்று கட்டிடம் எது?, அதை இடிக்க அதிகாரிகள் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற வழிமுறைகள் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக இரவில் இந்த மடத்தை இடித்து தள்ளி இருக்கிறீர்கள். கலெக்டர் முருகேஷ் இதற்கான வழக்கை சந்திக்க வேண்டியதிருக்கும். மத்திய கலாச்சார மந்திரியிடமிருந்து இந்நேரம் அவருக்கு ஓலை வந்திருக்கும் என்று குறிப்பிட்டார்.
சங்கர் பேசியது அனைத்தும் குறிப்பாக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக பேசியது பேஸ்புக்கில் லைவ்வாக ஒளிபரப்பாகி வைரல் ஆனது.
பாதியில் முடிந்த பேட்டி
அதன்பிறகு அம்மணி அம்மன் மடத்தை சுற்றி கம்பி கட்டி தகரம் வைத்து யாரும் உள்ளே நுழையாதபடி அதிகாரிகள் அடைத்தனர்.
அம்மணி அம்மன் மட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து அந்த மடத்தின் முன்பு நகர பிரமுகர்கள், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதை வரவேற்கிறீர்களா? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பாதியிலேயே பேட்டியை முடித்துக் கொண்டு சென்றனர்.
3 பேர் கைது
இந்நிலையில் அரசாங்க இடத்தில் அத்துமீறி நுழைந்ததாக பாஜக பிரமுகர் சங்கர் உள்பட 6 பேர் மீது அண்ணாமலையார் கோயில் இணை ஆணையாளர் குமரேசன், திருவண்ணாமலை நகர போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தேனிமலையைச் சேர்ந்த ஏழுமலை(வயது 49), காளியப்பன்(50), கார்த்திகேயன்(23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். சங்கர், அஜீத், வெங்கடேசன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.