திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு எஸ்.டி சான்று கேட்டு குருமன்ஸ் இனத்தினர் 500 பேர் திரண்டனர். அப்போது மாணவ-மாணவிகள் முட்டி போட்டு போராட்டம் நடத்தினர்.
ஸ்ரீ வீரபத்திர சுவாமி குருமன்ஸ் பழங்குடியினர் நலச்சங்கத்தினர் எஸ்.டி சான்று கேட்டு நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே அவர்கள் திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்தினர். அப்போது அங்கேயே சமைத்து சாப்பிட்டும், இரவு தங்கியும் போராட்டத்தை தொடர்ந்தனர். 2 வது நாள் அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் குருமன்ஸ் இனத்தினர் எஸ்டி சாதிச்சான்று கோரியும், பழங்குடி ஆய்வு மையம் இயக்குநர் டாக்டர் ஜக்கா பார்த்தசாரதி ஆய்வறிக்கை செயல்படுத்த வலியுறுத்தியும் திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பிறப்புரிமை மீட்கும் போராட்டத்தில் இன்று குதித்தனர். அவர்களை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நுழைய அனுமதி போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தை நடத்தினர்.
சட்டசபை நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த போராட்டத்தினால் ஏதும் அசாம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க 3 டிஎஸ்பி தலைமையில் ஏராளமான போலீசார் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டனர். அந்த சமயத்தில் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி அந்த இடத்திற்கு வந்து டிஎஸ்பியை அழைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அதன்பிறகு கிழக்கு காவல்நிலையத்திற்கு சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை நடத்தினர்.
மாநில குருமன்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.முருகேசன் தலைமையில் சங்க மாவட்ட செயலாளர் சி.மனோகரன், மாவட்ட பொருளாளர் எம்.ரமேஷ் உள்பட 500க்கும் மேற்பட்ட குருமன்ஸ் இன மக்கள் கையில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அமல்படுத்து அமல்படுத்து உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்து, ஆராய்ச்சி மையம் ஆய்வு செய்த அறிக்கையின்படி குருமன்ஸ் இன மக்களுக்கு எஸ்டி சாதிச்சான்று வழங்கு என அவர்கள் கோஷமிட்டனர். பழங்குடியின சான்று கிடைக்காததால் தங்களின் கல்வி உரிமை பாதிக்கப்படுவதாக கூறி மாணவர்கள் கொதிக்கும் வெயிலில் ரோட்டில் முட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறகு குருமன்ஸ் இன மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் ரயில்வே மேம்பாலம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேசி சாலை மறியலை கைவிடச் செய்தனர்.
அதன்பிறகு குருமன்ஸ் சங்க நிர்வாகிகள் கலெக்டரை அவரது வீட்டில் சந்தித்து பேசினர். இதைத் தொடர்ந்து போராட்டத்தை 2 வாரம் தள்ளி வைப்பதாக கூறி கலைந்து சென்றனர்.
காமராஜர் சிலை அருகே குருமன்ஸ் சங்க நிர்வாகிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சந்தித்து எஸ்.டி சான்று வழங்குவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறியிருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார். தங்களுக்கு சான்று வழங்காவிட்டால் மீண்டும் 17ந் தேதி போராட்டத்தில் ஈடுபடுவோம் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
செய்தி- கட்டுரைகளை அனுப்ப…