திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் ரூ.19 லட்சம் செலவு செய்து கமிஷனருக்கு புதிய அறை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆளும் கட்சியை சேர்ந்த திமுக உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகரமன்ற கூட்ட அரங்கில் நகரமன்ற குழு சாதாரண கூட்டம் நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சு.ராஜாங்கம் பொறியாளர் நீலேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆணையாளர் ரா.முருகேசன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு,
எம்.பழனி (அதிமுக):- பழைய தீர்மானங்கள் கிடப்பில் உள்ளது. நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இப்போது புதியதாக 54 தீர்மானங்கள் போடப்பட்டிருக்கிறது.
ராஜாங்கம்(துணைத் தலைவர்):- பணிகள் டெண்டர் விடப்பட்டு செயல்முறையில் உள்ளது.
சீனிவாசன்(அதிமுக):- பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ரோடுகளில் ஓடுகிறது. இதை சரி செய்யும் வாகனம் நம்மிடம் இல்லை. கவுன்சிலர் சந்திரபிரகாஷ் சொந்த செலவில் இதை சரி செய்தார்.
முருகேசன்(கமிஷனர்):- உறுப்பினர் தவறான தகவலை தரக் கூடாது. நகராட்சி வாகனம் பழுதடைந்து உள்ளதால் வேலூரிலிருந்து வாகனம் வரவழைக்கப்பட்டு அடைப்புகள் சரி செய்யப்பட்டன. பாதாள சாக்கடையில் கழிவு நீரில் மாட்டு சாணம், பரோட்டா மாவு போன்ற ஓட்டல் கழிவுகள் கலப்பதால் அடைப்பு ஏற்படுகிறது.
சந்திரபிரகாஷ்(அதிமுக):- இந்திரலிங்கம், காந்திசிலை, முனீஸ்வரன் கோயில் பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவு நீர் ரோடுகளில் ஓடுவதால் எனது வீட்டில் முன் கழிவு நீர் இருந்தால் சும்மா இருப்பாயா? என என்னை கேட்கின்றனர். ஒருவர் விஷம் குடித்து இறந்து விடுவேன் என மிரட்டுகிறார். கேக்கவே முடியாத வார்த்தைகளால் திட்டுகின்றனர். நானே நேரில் சென்று கழிவு நீர் ரோடுகளில் செல்லாதபடி சரி செய்து விட்டு வந்தேன்.
ராஜாங்கம்(துணைத் தலைவர்):- நகரமன்ற உறுப்பினர்கள் சொன்னால் அதிகாரிகள் உடனடியாக அப்பணிகளை செய்து முடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இப்படி விவாதம் நடைபெற்று வந்த நிலையில் 39 வார்டுகளிலும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை என்ற அதிமுக உறுப்பினர்களின் குற்றச்சாட்டிற்கு திமுக உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். உங்கள் வார்டை பற்றி மட்டும் பேசுங்கள், 39 வார்டையும் சேர்த்து சொல்லாதீர்கள் என திமுக உறுப்பினர்கள் சொன்னதையடுத்து அதிமுக- திமுக உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
முருகேசன்(கமிஷனர்):- நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை நகராட்சிக்கு அதிக நிதி ஒதுக்க கூடிய நிலையில் இதில் மக்கள் பங்களிப்பு என்பது அவசியம். இப்படி செய்தால் 3ல் 2 பங்கு அரசு தருகிறது. இதனால் நன்கொடைகளை கேட்டு பெற வேண்டும். பூங்காக்களை சுத்தம் செய்யாத துப்புரவு ஆய்வாளர், மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் அமைச்சரிடம் சொல்லி இடமாற்றமும் செய்யப்படுவார்கள்.
இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில் வருவாய் பிரிவு செயல்பட்டு வந்த இடத்தில் கமிஷனருக்கு புதியதாக அறை அமைக்க ரூ.19 லட்சத்தை ஒதுக்கீடு செய்யும் தீர்மானம் படிக்கப்பட்டது.
அப்போது பேசிய மண்டிபிரகாஷ்(திமுக) ஏற்கனவே கமிஷனருக்கு அறை உள்ள நிலையில் புதியதாக அறை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். திருவண்ணாமலை நகராட்சியில் நிதி பற்றாக்குறை உள்ள நிலையில் ஆணையாளருக்கு புதியதாக அறை அமைக்கப்படுகிறது. அவர் 10 நாள், 15 நாள் லீவில் சென்று விடுகிறார். அவரை பார்ப்பதற்கே முடியாத நிலையில் புதிய அறை எதற்கு? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு கமிஷனர் அளித்த பதில் அளித்தார்.
முருகேசன்(கமிஷனர்):- அடிக்கடி வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங்கில் கலந்து கொள்கிறேன். சில சமயங்களில் இரவு 12 மணி வரை கான்பரன்ஸ் நடக்கிறது. அனாவசியமாக அறை அமைக்கப்படவில்லை. மாநகராட்சியாக மாறும் போது அறை பயன்பெறும். தலைவரின் அனுமதி பெற்றுதான் அறை அமைக்கப்படுகிறது.

மண்டிபிரகாஷ்(திமுக):- துப்புரவு பணியாளர்கள் 3 மாதமாக சம்பளம் வரவில்லை என ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். வஊசி நகர் குடிநீர் தொட்டியில் கால் கழுவுகின்றர், துணி துவைக்கின்றனர். இந்த தண்ணீரைத்தான் 7 வார்டு மக்கள் குடிக்க வேண்டுமா? ஏன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை?, ஜியோ பைபர் கேபிள் பதிக்கும் பணிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அவர்கள் ரோடுகளை தோண்டி விட்டு அதை சரி செய்யாமல் சென்று விடுகின்றனர். பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற 35 நாட்கள் காத்திருக்க வேண்டியது உள்ளது. உங்க கவர்மெண்ட் வந்து விட்டதே இதை சரி செய்யமாட்டீங்களா? என மக்கள் கேட்கின்றனர். சிறப்பு நகராட்சியாக உள்ள நிலையில் இன்று மனு கொடுத்தால் மறுநாளே சான்று தரலாம். டிடிசிபி அங்கீகாரம் பெற்ற மனை பிரிவுகளில் நகராட்சிக்கு இடம்தான் கேட்டு பெற வேண்டும். இடத்திற்கு பணம் கட்டினால் வாங்க கூடாது. இடம் கேட்டு பெறவில்லை என்றால் தீர்மானத்தில் கையெழுத்து போட மாட்டேன்.
இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.
கூட்டத்தில் பல்வேறு வார்டுகளில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகாமல் தடுத்திடும் பொருட்டு சிறு பாலம் மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைப்பது எனவும், திருவண்ணாமலை காந்தி நகர் நகராட்சி இடத்தில் ரூ.30 கோடியே 10 லட்சத்தில் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை, பூச்சந்தை, பழக்கடைகள் அமைப்பது உள்பட 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புதிய மார்க்கெட் அமைப்பது குறித்த முந்தைய செய்தி
https://www.agnimurasu.com/2022/09/a-new-market-in-tiruvannamalai-at-rs-20-crores.html