திருவண்ணாமலை அம்மணி அம்மன் மட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று துவங்கியது. சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 23ஆயிரத்து 800 சதுர அடி இடத்தை அண்ணாமலையார் கோயில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண் சித்தர் அம்மணியம்மாள்
திருவண்ணாமலை அடுத்த சென்ன சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அம்மணி அம்மாள், சிவபெருமான் மீது கொண்ட அளவற்ற பக்தியால் திருவண்ணாமலையிலே தங்கி நமசிவாய மந்திரத்தினை உச்சரித்து திருநீறு தந்து எண்ணற்றவர்களின் நோய்களையும், வாழ்க்கைப் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார்.
திருவண்ணாமலை அருணாச்சலேசுவர் கோயிலின் வடக்குக் கோபுரம்(அம்மணி அம்மன்) பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையைக் கண்டு, பக்தர்கள், செல்வந்தர்களின் உதவியை நாடி அந்த கோபுரத்தினைக் கட்டி முடித்தார். அதனால் அந்த கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்று அழைக்கப்படுகின்றது. இவருடைய ஜீவ சமாதி திருவண்ணாமலை ஈசான்ய லிங்க கோயிலின் எதிரே அமைந்துள்ளது.
அம்மணி அம்மன் கோபுரம் எதிரில் மடம் அமைத்து அதில் அம்மணி அம்மாள் தங்கி வடக்கு கோபுரம் கட்டும் பணிகளை மேற்கொண்டார். அந்த மடத்தில் சிவபெருமான் உள்ளிட்ட சாமி சிலைகளை வைத்து வழிபாடு செய்து வந்தார்.
சாமி சிலைகள் மாயம்
அவரது மறைவுக்கு பிறகு அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கி இளைப்பாறவும், உணவு உண்ணவும் பயன்பட்டு வந்த இந்த மடம் காலப்போக்கில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியது. அங்கிருந்த சாமி சிலைகளும், அம்மணி அம்மாள் பயன்படுத்திய பொருட்களும் மாயமானது. அந்த மடத்தின் இடத்தில் தற்போது பாஜகவில் ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவில் மாநில துணைத் தலைவராக உள்ள வழக்கறிஞர் சங்கரின் மாடி வீடும் அமைந்திருந்தது.
ரூ.100 கோடி மதிப்பு
அம்மணி அம்மன் மடத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என விசுவ இந்து பரிஷத் 1978ம் ஆண்டே வழக்கு தொடர்ந்தது. பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கே.ஆர். குமாரும் 2015லிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற போராடி வந்தார். இதன் காரணமாக அம்மணி அம்மன் மடத்தின் 23 ஆயிரத்து 800 சதுர அடி இடத்தை அண்ணாமலையார் கோயில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இந்து சமய அறநிலையத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இச் சொத்தின் மதிப்பு சுமார் ரூ.100 கோடி என சொல்லப்படுகிறது.
இது சம்மந்தமாக இந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,
கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி
தமிழ்நாடு. இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகைக்குட்பட்ட, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலுடன் இணைந்த அம்மணியம்மன் மடத்திற்கு திருவண்ணாமலை நகரம் 22-வது பிளாக் கதவிலக்க எண்.9 சர்வே எண்.1377-ல் 23800 சதுரஅடிஅளவுள்ள இடம் சொந்தமாக உள்ளது. அவ்விடத்தில் டி.எஸ்.சங்கர் தீபா (சங்கரின் மனைவி) ஆக்கிரமித்து உள்ளார் என இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர் முன் மொழிவு சமர்ப்பித்துள்ளார்.
அறிக்கைகளை ஆய்வு செய்ததில் மேற்படி புகாரில் பூர்வாங்க ஆதாரம் இருப்பதாக கருதப்பட்டு, விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இது சம்மந்தமான விசாரணை 12.11.2021 அன்று முதல் நடைபெற்று வந்த நிலையில் 4.5.2022 அன்று நடைபெற்ற விசாரணைக்கு எதிர்மனுதாரர்கள்(சங்கர்) ஆஜராகவில்லை. எனவே அவர் தரப்பில் தெரிவிக்க ஏதுமில்லை என முடிவு செய்கிறது.
மேலும், திருக்கோயில் நலனுக்கு எதிராக எதிர்மனுதாரரால், திருவண்ணாமலை சார்பு நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட அசல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வருவாய் இழப்பு
எனவே 23800 சதுரஅடி பரப்பளவுள்ள ஆக்கிரமிப்பு செய்துள்ள இடம் அருள்மிரு அருணாசலேசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமானது என முடிவு செய்யப்படுகிறது. இதன் ஆக்கிரமிப்பாளர்களான டி.எஸ்.சங்கர், தீபா என்பவர்கள் நாளது வரை தொடர்ந்து சட்ட ஏற்பிலா அனுபோகம் செய்து வருகின்றார்கள் என்பதும், தற்காலம் அவர்கள் இந்த சொத்தின் அனுபவத்தில் இருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிருபணமாகியுள்ளது.
எனவே, திருக்கோயில் சொத்திற்கு தொடர்ந்து வருவாய் இழப்பு ஏற்படுத்தியமையாலும், திருக்கோயில் சொத்தினை பாதுகாத்திடும் பொருட்டும், இனி வருங்காலங்களில் ஆக்கிரமிப்பு ஏற்படாமலிருக்கவும், மேற்படி ஆக்கிரமிப்பினை காவல்துறை உதவியுடன் அகற்றிட திருவண்ணாமலை உதவி ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
200 போலீசார் குவிப்பு
இதைத் தொடர்ந்து இன்று காலை ஏடிஎஸ்பி சவுந்தரராஜன் தலைமையில் 2 டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள். சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 200 போலீசார் அம்மணி அம்மன் கோபுர பகுதியில் குவிக்கப்பட்டு அம்மணி அம்மன் மடத்தின் ஆக்கிரமிப்புகள் 5 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அதிரடியாக அகற்றப்பட்டது.
கோட்டாட்சியர் மந்தாகினி மேற்பார்வையில் வருவாய்த்துறை, நகராட்சி, இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி ஆகிய துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
போக்குவரத்திற்கு தடை
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து அடியோடு தடை செய்யப்பட்டது. பக்தர்கள் வேறு கோபுரம் வழியாக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.