போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து ரகளை செய்ததாக தென்முடியனூர் பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
நேற்று (24ந் தேதி) காலை தண்டராம்பட்டு போலீஸ் சரகம் தென்முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 30), ராஜா (37) ஆகியோர் அல்லப்பனூர் ரோடு அருகே குடிபோதையில் வாகனங்களை மறித்து தகராறு செய்து கொண்டிருப்பதாக தென்முடியனூர் கிராம நிர்வாக அலுவலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு தண்டராம்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் சென்று தகராறு செய்து கொண்டிருந்த 2 பேரையும் கைது செய்து தண்டராம்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தார்.
இதைக் கேள்விப்பட்டு தென்முடியனூர் கிராமத்தை சேர்ந்த பா.ஜ.க பட்டியல் இன அணியின் மாவட்ட துணைத் தலைவர் குபேந்திரன் (55), தென்முடியனூர் காலனியை சேர்ந்த ஏழுமலையின் மனைவி சாந்தி, வெங்கடேசன் மனைவி நிஷாந்தி, தங்கராஜ், லோகேஷ், சுந்தர், தங்கராஜ் மனைவி உஷா, முத்துவேல், சத்தியசீலன் மற்றும் சிலர் தண்டராம்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு கேட்டு ரகளையில் ஈடுபட்டார்களாம்.
சப்-இன்ஸ்பெக்டரையும், அங்கு பணியிலிருந்த போலீசாரையும் திட்டி அரசு பணி செய்ய விடாமல் தடுத்தனர்களாம். மேலும் கைது செய்யப்பட்டவர்களை வெளியே விடவில்லையென்றால் கொன்று விடுவோம் என்றும் மிரட்டினார்களாம்.
இது குறித்து உதவி ஆய்வாளர் பச்சையப்பன் அளித்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து பா.ஜ.க பிரமுகர் குபேந்திரன், முத்துவேல், தங்கராஜ், ஏழுமலை மற்றும் பிரகாஷ் ஆகியோரை இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கோர்ட்டு உத்தரவின் பேரில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏற்கனவே தென்முடியனூரில் இருதரப்பினருக்கும் பிரச்சனை இருந்து வரும் நிலையில் தற்போது எடுக்கப்பட்டுள்ள கைது நடவடிக்கையின் காரணமாக அந்த ஊரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.